ஆம்புலன்ஸ் வராததால் கர்ப்பிணி மனைவியை தோளிலேயே தூக்கி சென்ற கணவர்
புதன், 21 செப்டம்பர் 2016 (16:34 IST)
மருத்துவமனை தொடர்பான சர்ச்சைகள் வடமாநிலங்களில் வலுத்து வருகிறது.
இறந்து போன தன் மனைவியின் உடலை எடுத்து செல்ல, மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வாகனத்தை கொடுக்காததால், ஒருவர் அவரது உடலை சில கிலோ மீட்டர் தனது தோளிலேயே தூக்கி சென்ற விவகாரம் தேசத்தை உலுக்கியது.
அதேபோல், கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தன் மகனை, தோளிலேயே தூக்கி சென்ற தந்தையை பற்றியும் செய்தி வெளியானது.
இந்நிலையில் தனது கர்ப்பிணி மனைவியை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால், அப்பெண்ணின் கணவர், அவரை தனது தோளிலேயே தூக்கி சென்ற செய்தி வெளியாகியுள்ளது.
ஒடிசா மாநிலம் கன்ஷாரிகோலா என்ற கிராமத்தில் வசிக்கும் பங்காரி பிரக்ஷா என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு இன்று காலை உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அப்பெண்ணின் கணவர், அவரை கல்யான்சிங்பூர் என்ற பகுதியில் உள்ள சுகாதார மையத்திற்கு அழைத்து செல்ல வேண்டியிருந்தது.
அதனால், அவர் அரசு ஆம்புலன்சு வசதிக்காக 102 மற்றும் 108 ஆகிய எண்களை தொடர்பு கொண்டார். ஆனால் சில மணிநேரங்கள் ஆகியும் ஆம்புலன்ஸ் வண்டி வரவில்லை. எனவே வேறு வழியில்லாமல் மனைவியை, தனது தோளிலேயே தூக்கி வைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டார்.
ஒரு கிலோ மீட்டர், தனது மனைவியை தோளில் சுமந்து சென்று, அந்த சுகாதார மையத்தை அடைந்துள்ளார்.
இந்தப் புகைப்படம் வெளியாகி ஒடிசா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.