உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன்: ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பாலி நாரிமனின் வாதங்கள்

வெள்ளி, 17 அக்டோபர் 2014 (16:09 IST)
ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன் ஆஜராகி, ஊழல் வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட பழைய தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வாதாடினார்.
 
இதன்மூலம், ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமனின் வாதங்கள் வருமாறு:-
 
ஊழல் வழக்கில் ஒரு நபர் குற்றம் நிரூபிக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்கு தண்டனையும் பெறப்பட்ட நிலையில் அவர் சார்பில் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அதை உச்ச நீதிமன்றம் சற்று தாராள கொள்கையுடன் அணுக வேண்டும்.
 
உச்ச நீதிமன்றம் இதற்கு முன்னர் சந்தித்த பல்வேறு வழக்குகளில், தண்டனை கைதி மேல் முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும்போது அவரை தொடர்ந்து சிறையில் வைப்பது என்பது நீதிக்கு எதிரானது.
 
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், மேல் முறையீட்டு மனு மீதான வழக்கு முடியும் வரை உச்ச நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபரின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க அதிகாரம் உள்ளது. இதை கருத்தில் கொண்டே கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க எதிர்ப்பு இல்லை என பவானி சிங் தெரிவித்தார்.
 
பவானி சிங் வாதத்தில் தவறேதும் இல்லை. ஆனால், அவர் ஏதோ ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பேசப்பட்டது. எனவே, ஊழல் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். தேவைப்பட்டால் ஜெயலலிதா வீட்டுக் காவலில் இருக்கவும் தயாராக இருக்கிறார்" என்று நாரிமன் வாதிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்