மழைக்காலக் கூட்டத் தொடரை சீர்குலைக்க எதிர்கட்சிகள் சதி: அருண் ஜேட்லி குற்றச்சாட்டு

வெள்ளி, 3 ஜூலை 2015 (01:14 IST)
மழைக்காலக் கூட்டத் தொடரை சீர்குலைக்க எதிர்கட்சிகள் சதி செய்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ஆம் தேதி துவங்குகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில், டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் வரும் ஜூலை 21ஆம் தேதி துவங்குகிறது. இந்தக் கூட்டத் தொடரில் ஐபிஎல் ஊழல் புகாரில் சிக்கியுள்ள லலித் மோடி, போர்ச்சுகல் செல்ல பயண ஆவணம் பெற, பிரிட்டனிடம் பேசி மத்திய அமைச்சர்  சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே உதவிய விவகாரத்தை எழுப்பி அவையில் பெரும் அமளி ஏற்படுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
 
மேலும், ஜிஎஸ்டி மசோதா, நிலச் சட்டம் போன்றவை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் அவற்றிற்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடாது என நம்புகிறோம். அதே போல, லலித்மோடி விவகாரத்திலும் நாகரீகம் கடைபிடிக்கும் என நம்புகிறோம்.
 
சிலரது கருத்துகள் தொலைக்காட்சியில் நடைபெறும் விவாதங்களுக்கு வேண்டும் என்றால் சரியாக இருக்கும். அரசை நிர்வகிக்க பொருந்தாது என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்