டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதாவை அமலாக்கத் துறை மார்ச் 15-ம் தேதி கைது செய்தது. அவரை முதலில் 7 நாட்களும் பிறகு மேலும் 3 நாட்களும் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அமலாக்கத் துறை காவல் முடிந்து மார்ச் 26-ம் தேதி கவிதா டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை ஏப்ரல் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கவிதா டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். கவிதாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 23-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கவிதாவிடம் விசாரணை நடத்த டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, கடந்த 5-ம் தேதி நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கிய நிலையில், கவிதாவிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், இன்று சிறையில் வைத்து அவரை கைது செய்தனர்.