கனமழையால் கல்லூரி சுவர் இடிந்ததில் 6 பேர் பலி: பூனேவில் பயங்கரம்

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (12:58 IST)
மஹாரஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், பூனேவில் உள்ள கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்தது.

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மும்பையை சுற்றியுள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ளம் நிரம்பி தண்ணீரால் அப்பகுதி சூழ்ந்துள்ளது போல் காட்சியளிக்கிறது.

கனமழை காரணமாக அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு மஹாராஷ்டிரா அரசு விடுமுறை அளித்துள்ளது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் புனேவின் அம்பேகான் பகுதியில் அமைந்துள்ள சிங்காத் கல்லூரியின் சுவர் இடிந்து விழுந்தது. பின்பு இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு மீட்பு படையினருடன் விரைந்து வந்தனர்.

இந்த இடிபாட்டில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள், அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மும்பையில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழைக்கு, இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து தற்போது பூனேவில் கல்லூரியின் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் பலியான செய்தி மும்பை மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்