கடன் செலுத்த தாமதமானதால் விவசாயியை டிராக்டர் ஏற்றிக் கொன்ற கலெக்‌ஷன் ஏஜெண்டுகள்

Webdunia
திங்கள், 22 ஜனவரி 2018 (15:23 IST)
உத்திர பிரதேசத்தில் விவசாயி வாகன கடனை திருப்பி செலுத்த தாமதமானதால், கலெக்சன் ஏஜெண்டுகள் அவரை டிராக்டர் ஏற்றி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சீத்தாபூர் அருகே உள்ள பவுரி கிராமத்தை சேர்ந்தவர் ஜியான்சந்திரா(45). விவசாயியான இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஒரு நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் கடன்பெற்று டிராக்டர் வாங்கினார். அந்த டிராக்டருக்கு கடந்த ஆண்டு வரை ரூ.4 லட்சம் செலுத்தி இருந்தார். இந்த மாதம் 65000 செலுத்தியுள்ளார். ஆனாலும் அவர் செலுத்திய பணம் குறைவாக உள்ளது. உடனடியாக பணத்தை தர வேண்டும் என்று நிதி நிறுவனம் அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளது.
 
இந்நிலையில் கலெக்ஷன் ஏஜெண்டுகள் 5 பேர் ஜியான்சந்திரா வீட்டுக்கு சென்று உடனடியாக பணத்தை செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கின்றனர் அதற்கு அவர் நான் உரிய பணத்தை தொடர்ந்து செலுத்தி வருகிறேன். எனவே உடனடியாக பணத்தை செலுத்த அவசியம் இல்லை என்று கூறியிருக்கிறார். இதனால் கலெக்சன் ஏஜெண்டுகள் ஜியான்சந்திராவின் டிராக்டரை ஓட்டி செல்ல முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஜியான்சந்திரா, டிராக்டரின் பேனட்டில்  ஏறி அமர்ந்து போராட்டம் செய்தார். கலெக்‌ஷன் ஏஜெண்டுகள் இதனை கண்டுகொள்ளாமல் டிராக்டரை வேகமாக ஓட்டி சென்றனர். எதிர்பாராத விதமாக கீழே விழுந்த ஜியான்சந்திரா மீது டிராக்டர் டயர் ஏறி, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் கிராமமக்கள் திரண்டனர்.  அதற்குள் 5 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
 
போலீஸார் இச்சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பியோடிய 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்