திருப்பதி திருமலையில் பக்தர்களுக்கு கூடுதல் லட்டு: மகிழ்ச்சியில் பக்தர்கள்

புதன், 15 ஜூலை 2015 (01:17 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காத்திருப்பு அறையிலேயே பக்தர்களுக்கு கூடுதலாக லட்டு டோக்கன் வழங்கப்படுவதால் பக்தர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

 
ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருப்பதி. இது ஒரு வைணவ தலமாகும். இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற திருத்தலங்களில் இது ஒன்று. இங்கு சுவாமி தரிசனம் செய்ய பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி வருகின்றனர்.
 
இத்தலம் வைஷ்ணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது.
 
திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுள்ள திருமலையும், ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கொண்டுள்ள திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவாகத் திருப்பதி என்றே பக்தர்களால் பக்தியுடன் போற்றப்படுகிறது.
 
இவ்வாறு புகழ் வாய்ந்த, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உலகப் புகழ் பெற்ற திருப்பதி லட்டு, இலவசமாகவும், கூடுதல் விலையின் அடிப்படையில் லட்டு மற்றும் பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
 
ஆனால், இந்த லட்டுக்களைப் பெற தனியாக அமைக்கப்பட்டுள்ள இடத்திற்குச் சென்று பெற வேண்டும். இதனால், பலருக்கு கால நேரம் விரையமானது. இதனை சரி செய்ய தேவஸ்தானம் பல முயற்சிகளைச் செய்து வந்தது.
 
இந்த நிலையில், திருப்பதி திருமலை கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருக்கும் அறையிலேயே, ரூ.50க்கு கூடுதலாக 2 லட்டு டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தேவஸ்தானத்தின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்