டெல்லியில் துணை நிலை ஆளுனருக்கும், முதல்வருக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில் இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக மாநில முதல் அமைச்சர்கள், ஆளுனர்கள் இடையே ஏற்பட்டு வரும் மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. டெல்லியில் உள்ள ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை பின்லாந்துக்கு அனுப்பி அங்குள்ள கல்விமுறை குறித்த பயிற்சி பெற செய்ய உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
ஆனால் அந்த திட்டத்திற்கு டெல்லி துணை நிலை ஆளுனர் வி.கே.சக்சேனா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவருக்கும், முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.
இந்நிலையில் சட்டசபை விவாதத்தில் பேசிய முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் “யார் இந்த துணைநிலை ஆளுனர்? நம் குழந்தைகள் எப்படி படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க அவர் யார்? எங்களை தடுக்க அவருக்கு அதிகாரம் இல்லை.
இந்த துணைநிலை ஆளுனர் என் பணிகளை துருவி துருவி பார்ப்பது போல எனது ஆசிரியர்கள் கூட எனது வீட்டுப்பாடத்தை சரிபார்த்தது இல்லை. நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மந்திரி. ஆனா நீங்கள் யார்? என்று அவரிடம் கேட்டேன். அவர் குடியரசு தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றார்.
ஆங்கிலேயர்கள் வைஸ்ராய்களை தேர்ந்தெடுப்பது போலவா என்று கேட்டேன்” என்று பேசியுள்ளார்.