கேரளாவில் தலித் மாணவி கற்பழித்து கொலை: நடிகை பிரியாமணி கருத்தால் சர்ச்சை

வியாழன், 5 மே 2016 (13:00 IST)
கேரளாவில், ஒரு சட்டக் கல்லூரி மாணவியை ஒரு கும்பல் சமீபத்தில் கற்பழித்து கொலை செய்த விவகாரம் பற்றி  நடிகை பிரியாமணி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.


 

 
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ளது பெரும்பாவூரை சேர்ந்த ஜிஷா(29) என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண், கடந்த 28ம் தேதி அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். 
 
விசாரணையில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட ஜிஷா, உடலில் 30 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததும், அவரது குடலை கொலை செய்தவர்கள் உருவியுள்ளனர் என்பதும் தெரியவந்தது. இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுபற்றி கேரளாவைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் தங்கள் சமூக வலைப் பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 2012ஆம் ஆண்டு டெல்லியில் நிர்பயா என்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்கு சமமானது இந்த சம்பவம் என்றும், பாதிக்கப்பட அந்த தலித் மாணவிக்கு நியாயம் வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகை பிரியாமணி “மீண்டும் ஒரு பெண் கொடுமையான முறையில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடு என்று எனக்கு தோன்றவில்லை. அந்த பெண்ணுக்கு நீதி வேண்டும்” என்றும்,


 

 
“இது போன்ற சம்பவங்கள் தொடருமானால், இந்தியாவில் உள்ள பெண்கள், பாதுகாப்பான வேறு எந்த நாட்டுக்கு சென்று விடுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.


 

 
இதனால் பிரியாமணிக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அவர் இந்தியாவிற்கு எதிராக குரல் கொடுக்கிறார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
தன்னுடைய கருத்துக்கு எழுந்த எதிர்ப்புகள் பற்றி அவர் மற்றொரு டிவிட்டில் “என்னுடைய கருத்துகளை சரியாக படியுங்கள். நான் இந்தியாவிற்கு எதிராக எதுவும் பேசவில்லை. இந்தியாவில் பெண்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடக்கும் கொடுமைகளால் எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை மட்டுமே பதிவு செய்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்