இந்திய கிரிக்கெட் வீரர்களை கொல்வேன்?? என மிரட்டல் விடுத்தவர் கைது

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (17:23 IST)
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபரை போலீஸார் கைது செய்தனர்.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸுடன் சுற்று பயண ஆட்டங்கள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கவுன்சிலுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. அதில் இந்திய கிரிக்கெட் வீரர்களை நீண்ட நாட்களாக கவனித்து வருவதாகவும், அவர்களை கொலை செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இது கிரிக்கெட் வாரியத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து உடனடியாக உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதேசமயம் இந்த மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியது யார் என்பது குறித்தும் தேட தொடங்கினார்கள்.

மின்னஞ்சல் அசாமிலிருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அசாம் சைபர் க்ரைம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக களம் இறங்கிய அசாம் போலீஸார் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு மர்ம நபரை பிடித்தனர்.

விசாரணையில் குற்றவாளியின் பெயர் ப்ரஜா மோகன் தாஸ் என்பதும், அசாமிலுள்ள சாந்திபூரில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மின்னஞ்சல் மிரட்டலால் பயங்கரவாத அசம்பாவிதம் ஏதாவது நிகழ்ந்துவிடுமோ என கிரிக்கெட் ரசிகர்கள் பயந்திருந்த நிலையில் அசாம் போலீஸார் உடனடியாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்துள்ள சம்பவம் ரசிகர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்