நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா: திரைவிமர்சனம்

வெள்ளி, 14 ஜூன் 2019 (12:25 IST)
யூடியூபில் பிரபலமான ஸ்டார்கள் பலர் இணைந்து பெரிய திரைக்கு முயற்சி எடுத்திருக்கும் படம் தான் 'நெஞ்சமுண்டு நேர்மையுன்டு ஓடு ராஜா'
 
ரியோ, விக்னேஷ்காந்த் இருவரும் ஒரு யூடியூப் சேனலுக்காக பிராங்க் ஷோ நடத்தி வருபவர்கள். ஒரு கட்டத்தில் நாயகியின் மீது கழுத்தில் கை வைத்து பிராங்க் ஷோ நடத்தும்போது அவர்களின் தைரியத்தை பார்த்த பிரபல தொழிலதிபர் ராதாரவி அவர்களிடம் ஒரு பொறுப்பை ஒப்படைக்கின்றார். அதாவது இருவரும் சேர்ந்து மூன்று டாஸ்க்குகளை சரியாக செய்ய வேண்டும். அப்படி சரியாக செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருகிறேன் என்று ராதாரவி கூறும் கண்டிஷன்களை ஏற்றுக்கொண்டு களமிறங்குகின்றனர் ரியோ, விக்னேஷ் காந்த். அந்த மூன்று டாஸ்குகள் என்ன? அதில் உள்ள ஆபத்து என்ன? ராதாரவி ஏன் இந்த மூன்று டாஸ்குகளையும் கொடுத்தார்? குறிப்பாக உயிருக்கே ஆபத்தான அந்த மூன்றாவது டாஸ்க் பின்னணியில் ராதாரவியின் பங்கு என்ன? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை
 
யூடியூபில் பிரபலமான ரியோ ராஜ் இந்த படத்தில் காமெடி கலந்த நாயகன் வேடத்தை ஏற்றுள்ளார். ஓரிரு காட்சிகள் தவிர நடிப்புக்கும் இவருக்கும் ரொம்ப தூரம் போல் தெரிகிறது. குறிப்பாக செண்டிமெண்ட், ரொமான்ஸ் காட்சிகளில் வழிகிறார். விக்னேஷ் ஒரு படத்தில் இருந்தால் அந்த படம் நிச்சயம் சொதப்பிவிடும் என்பதற்கு ஏற்கனவே 'தேவ்' ஒரு நல்ல உதாரணம். இந்த படத்தை இரண்டாவது உதாரணமாக கூறலாம். நல்ல காமெடிக்கான உருவ அமைப்பு இருந்தும் காமெடி சுத்தமாக அவருக்கு வரவில்லை என்பது கொஞ்சம் வருத்தமே
 
நாயகி ஷெரின் இந்த படத்தின் கதைக்கு தேவையா? என்ற அளவில் உள்ளது. ரிப்போர்ட்டராக வரும் அவர் திடீரென நாஞ்சில் சம்பத் மகள் என்கிறார்கள், அதையும் ரகசியமாக வைத்திருக்கின்றேன் என்கிறார்கள். ஒரே குழப்பம் 
 
நாஞ்சில் சம்பத் வரும் காட்சிகளில் தியேட்டரே கலகலக்கின்றது. ஒரு மாநிலத்தில் இரண்டு முதலமைச்சர்கள் இருக்கும்போது ஒரு தொகுதிக்கு இரண்டு எம்.எல்.ஏக்கள் இருக்கக்கூடாதா? போன்ற கிண்டலான கேள்விகளும், இனிமேல் ஓட்டு போடுபவர்களுக்கு பணம் கொடுக்க தேவையில்லை, ஓட்டு எண்ணுபவர்களுக்கு கொடுத்தால் போதும் என்று வருங்கால அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் அறிவுரையும் காமெடியின் உச்சகட்டம்
 
ராதாரவி வழக்கம்போல் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் அழுத்தமானதாக இருந்தாலும் சாதாரணமாக ஊதித்தள்ளி விடுகிறார். எமோஷனல் காட்சிகளிலும் அவர் சிறப்பான நடிப்பை தந்துள்ளார்.
 
ஷபீர் இசை, செந்தில்குமாரின் ஒளிப்பதிவு மற்றும் ஃபென்னி ஒலிபர் படத்தொகுப்பு ஆகியவை அனைத்துமே சுமார் ரகம். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஒரு மினிமம் பட்ஜெட் படம் என்பதால் அவருடைய முதலுக்கு மோசமிருக்காது
 
இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் படம் முழுவதையும் மொக்கையான காட்சிகளால் லாஜிக் இல்லாமல் நிரப்பிவிட்டு கிளைமாக்ஸை மட்டும் சூப்பராக கொடுத்துள்ளார். அதற்காகவே அவரை மன்னித்துவிடலாம். கிளைமாக்ஸில் அவர் கூறியிருக்கும் விஷயம் படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் பெரும் ஆச்சரியத்தை கொடுக்கும்., எழுந்து நின்று கைதட்டலாம் போல் உள்ளது.
 
இந்த இருபது நிமிட கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக நிச்சயம் படத்தை பார்க்கலாம். மற்ற காட்சிகள் யூடியூபில் ரசிகர்களாக இருப்பவர்கள் மட்டும் ரசிப்பார்கள்.
 
2.25/5

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்