மரண தண்டனை விதிக்கலாம் - உச்ச நீதிம‌ன்ற‌ம் அறிவுரை

செவ்வாய், 3 மார்ச் 2009 (12:01 IST)
சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறையாமல் இருக்க, கொடூரமான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்று கீழ் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை அளித்துள்ளது.

மிகவும் கொடூரமான குற்றங்களை செய்தவர்கள் மீது தேவையின்றி இரக்கம் காட்டினால் சட்டத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை கெட்டுவிடும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 1994ஆம் ஆண்டு குடும்பச் சண்டை காரணமாக 6 பேர் கொண்ட கும்பல், வீட்டுக்குள் புகுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை படுகொலை செய்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஆனால் அலகாபாத் உயர் நீதிமன்றம் அந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துவிட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல் முறையீடு செய்யப்பட்டது. இதில் மரண தண்டனையை குறைத்து உத்தரவிட்ட அலகாபாத் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.

நீதிபதிகள் அரிஜித் பசாயத், முகுண்டகம் சர்மா ஆகியோரைக் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில், திட்டமிட்ட குற்றங்கள் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டிருந்தால் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கலாம்.

குற்றவாளிகளிடம் தேவையின்றி இரக்கம் காட்டி போதுமான தண்டனை வழங்காவிட்டால் சட்டத்தின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை கெட்டுப்போகும்.

எனவே குற்றங்களின் தன்மை, அவை செய்யப்பட்ட விதம் ஆகியவற்றை அறிந்து போதிய தண்டனை அளிப்பது நீதிமன்றங்களின் கடமை ஆகும்.

தனிப்பட்ட விரோதம் காரணமாக திடீரென நடக்கும் கொலைக்கு மரண தண்டனை விதிக்க இயலாது. திட்டமிட்டு அப்பாவி மக்களை பெருமளவில் கொன்று குவிக்கும் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்