ஒவ்வொரு வருடத்திலும் அல்லாஹூ தஆலா பல விஷேச தினங்களை ஏற்படுத்தி அவற்றில் செய்யும் நல்அமல்களுக்கு பன் மடங்கு நன்மைகளைத் தருகின்றான். அப்படிப்பட்ட நாட்களைக் கொண்டதுதான் ரமலான் மாதமும், இதில் செய்யும் நன்மைகளுக்கு அதிக கூலிகள் கொடுக்கப்படுகின்றன.
மற்ற மாதங்களில் செய்யும் அமல்களைவிட இம்மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் அதிகமான அமல்களைச் செய்வார்கள். இம்மாதத்தில் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது. அல்லாஹ்வின் அருள் இறங்குகின்றது. நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கின்றது. அல்லாஹ் பாவங்களை மன்னிக்கின்றான்.
webdunia photo
WD
‘’யார் இம்மாதத்திலும் அல்லாஹ்விடம் பிழை பொறுப்புத் தேடவில்லையோ அவன் நாசமாகட்டும்‘’ என ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அதற்கு ஆமின் சொன்னார்கள்.இன்னும் யார் இம்மாதத்தின் நன்மையை இழந்தானோ அவன் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகவே யாரெல்லாம் இம்மாதத்தை அடைந்தீர்களோ இதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதி நன்மைகளை அதிகம் செய்யுங்கள்! இன்னும் செய்த தவறுகளுக்காக பாவ மன்னிப்பும் தேடுங்கள், அல்லாஹ் நம் அனைவரையும் அவனின் அருளையும் பாவ மன்னிப்பையும், நரக விடுதலையையும் பெற்றவர்களாக ஆக்குவானாக!
ரமலான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜீவன்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் ‘’நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே நிறுத்திக் கொள்ளுங்கள்!’’ என்று உரக்கச் சொல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : திர்மிதீ, இப்னுமாஜா
ரமலான் நோன்பின் சிறப்புகள்
நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும். ஆகவே நோன்பு நோற்றிருக்கும் நேரத்தில் உடலுறவு கொள்ளக்கூடாது. இன்னும் இஸ்லாத்துக்கு மாற்றமான செயல்களையும் செய்யக்கூடாது. யாராவது சண்டையிட்டால் அல்லது ஏசினால் ‘நிச்சயமாக நான் நோன்பாளி, நான் நோன்பாளி’ என்று கூறிக்கொள்ளட்டும். என் உயிர் எவனிடம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணையாக நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாகும். இவ்வாறு நபி(ஸல்) கூறினார்கள்.
webdunia photo
WD
* நோன்பு நோற்றவன் தன் உணவையும், குடிபானத்தையும், இச்சையையும் எனக்காகவே விட்டுவிடுகிறான். நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மகளை வழங்குவேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
* சுவர்க்க வாசல்களில் ஒன்றுக்கு ‘’அர்ரய்யான்’’ என்று சொல்லப்படும். மறுமை நாளில் அவ்வாசலில் நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள். ‘’நோன்பாளிகள் எங்கே’’ என்று அழைக்கப்படும், அப்போது நோன்பாளிகள் எழுந்து அவ்வாசல் வழியாக நுழைவார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் மூடப்படும். அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாசலில் நுழையமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
* நோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யும் எல்லா அமல்களுக்கும் பத்திலிருந்து எழுநூறு மடங்காக (கூலி) கொடுக்கப்படுகின்றது. அது (நோன்பு) எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். (காரணம்) அவனுடய இச்சையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகின்றான். நோன்பு திறக்கும்போதும், இன்னும் அவனுடய இறைவனை சந்திக்கும் போதும் ஆகிய இரு சந்தோஷங்கள் வாயலிருந்த வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாயிருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி
வணக்கங்களை அல்லாஹ் நம்மீது கடைமையாக்கியது நாம் அல்லாஹ்விற்கு, கட்டுப்படுகின்றோமா? இல்லையா? என்பதை சோதனை செய்வதற்குத்தான். வணக்கங்களை நாம் செய்வதினாலோ, அல்ல விடுவதினாலோ அல்லாஹ்விற்கு எந்த லாபமோ, நஷ்டமோ கிடையாது. இன்னும் அல்லாஹ் ஒவ்வொரு வணக்கத்தைக் கடைமையாக்குவதின் மூலமாக ‘’எப்படிப்பட்ட தியாகத்தையும் அல்லாஹ்விற்காக நாம் செய்யத் தயாராக இருக்கின்றோமா’’ என்பதைச் சோதிப்பதற்குத்தான். அப்படிச் செய்பவர்களுக்கு கூலியாக மறுமையில் சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான்.
webdunia photo
WD
இந்த வணக்கங்களின் வரிசையில் உள்ளதுதான் நோன்பு. நோன்பைப் பொறுத்தவரையில் மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கும் முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வது. இவைகளை வெறும் சடங்காகச் செய்யக்கூடாது. வணக்கம் என்ற எண்ணத்தோடு செய்ய வேண்டும். நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான்.
விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடைமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடைமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று) பயபக்தியுடையவர்களாகலாம்.
அல்குர்ஆன் 2:183
தக்வா (இறையச்சம்) என்றால் அல்லாஹ்விற்கு பயந்து, அவன் ஏவியவைகளைச் செய்யும், தடை செய்தவகளைத் தவிர்த்தும் நடப்பதுதான். ‘’தக்வாவின் உரிய தோற்றத்தை’’ நோன்பு நமக்கு கற்றுக் கொடுக்கின்றது. நோன்பாளி யாருக்கும் தெரியாத இடத்தில் தனிமையில் இருக்கும்போதும் பசியுள்ளவனாக இருந்தும் தன்னிடமுள்ள உணவை உண்பதில்லை.
webdunia photo
WD
தாகமுள்ளவனாக இருந்தும் எதையும் குடிப்பதில்லை. இச்சை இருந்தும் அதை நிறைவேற்றுவதில்லை. இதற்கெல்லாம் காரணம் நான் தனிமையில் இருந்தாலும் இந்த நோன்பை கடைமையாக்கிய அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணத்தினால்தான். இதுதான் ‘’இறையச்சத்தின் உண்மையான தோற்றமாகும்‘’.
இத்தன்மை நோன்போடு முடிந்துவிடக்கூடாது. வாழ்க்கை முழுவதிலும் ஒவ்வொரு வினாடியும் இதே எண்ணத்தோடு ஒவ்வொரு முஸ்லிமும் வாழவேண்டும். இந்த எண்ணத்தோடு வாழ்ந்தால்தான் தொழாதவர் ஏன் தொழவில்லை? இத்தொழுகையைக் கடைமையாக்கிய இறைவன் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று நினைத்துத் தொழ ஆரம்பித்துவிடுவர். பாவங்களில் ஈடுபடக்கூடியவர், அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் அவன் என்னைத் தண்டிப்பான் என்று நினைத்து அதை விட்டுவிடுவார். இதனால்தான் அல்லாஹ் குர்ஆனின் பல இடங்களில் ஈமான் கொண்டவர்களே அல்லாஹூ அவனது தூதர் முஹம்ம (ஸல்) அவர்களும் ஏவியதில் முடியுமானவைகளைச் செய்யும், தடை செய்தவைகளை முற்றிலுமாக தவிர்த்து நடப்பதற்கு உறுதியான முடிவெடுங்கள், அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக...!
webdunia photo
WD
நோன்பில் இந்த உயரிய பண்பு இருப்பதினால்தான் அல்லாஹ் அதனை ஒரு தனிப்பட்ட வணக்கமாகக் கூறுகின்றான். ஹதீல் சூத்ஸியில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘’நோன்பைத் தவிர ஆதமுடைய மக மகன் செய்யக்கூடிய எல்லா வணக்கங்களும் அவனுக்குரியதே’’ அது (நோன்பு) எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கிறேன், (காரணம்) அவன் தன் இச்சையையும், உணவையும், குடிபானத்தையும் அல்லாஹ்வுக்கே உரியன. அவனே எல்லா வணக்கங்களுக்கும் கூலி கொடுக்கின்றான். அப்படி இருந்தும் நோன்பை மட்டும் அல்லாஹ் தனித்துவப்படுத்திச் சொல்வதற்கு காரணம், அது உண்மையான இறையச்சத்தோடும், இக்லாஸ் (மனத் தூய்மை) உடனும் நோற்கப்படுவதினால்தான். எனவே நோன்பு விஷயத்தில் அல்லாஹ்விற்கு நாம் அஞ்சுவது போன்று, மற்ற எல்லா விஷயங்களிலும் எல்லா காலங்களிலும் அல்லாஹ்வை அஞ்சி வாழ்வோமாக...!
யார் நோன்பை இந்த உயரிய நோக்கமின்றி வெறும் சடங்குக்காக நோற்கிறாரோ அதில் எந்தவித பிரயோசனமும் இல்லை. யார் கெட்ட பேச்சுக்களையும் கெட்ட செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடியை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.