முன்னோடித் திட்டங்களுக்கு ரூ.31 ஆயிரம் கோடி!

சனி, 1 மார்ச் 2008 (13:11 IST)
மத்திய அரசின் முன்னோடித் திட்டங்களான தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி அளிப்புத் திட்டம், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுமலர்ச்சி இயக்கம், ராஜிவ் காந்தி குடிநீர் இயக்கம், முழு சுகாதார இயக்கம் ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் ரூ.31,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் சட்டபூர்வ உறுதிமொழியை காப்பாற்றுவதற்காக அதிக நிதி தரப்படும் என்று‌ம், கிராமப் பகுதிகளில் உள்ள அனைத்து 596 மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுவதுட‌ன், இதற்காக முதலில் ரூ.16,000 கோடி நிதியுதவி செய்யப்படும் என்று‌ம் தெரிவித்தார்.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுமலர்ச்சி இயக்கத்திற்கான ஒதுக்கீடு தற்போதுள்ள ரூ.5,482 கோடியிலிருந்து ரூ.6,866 கோடியாக உயர்த்தப்படும் என்றும், ராஜிவ் காந்தி குடிநீர் இயக்கத்திற்கான நடப்பு நிதியாண்டின் ஒதுக்கீடான ரூ.6,500 கோடி வரும் நிதியாண்டில் ரூ.7,300 கோடியாக உயர்த்தப்படுவதாகவு‌ம் சிதம்பரம் அறிவித்தார்.

இதேபோல முழு சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு 2008-09-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்