(1944ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் நாள் இந்திய சுதந்திரக் கழகத்திற்கு நேத்தாஜி தலைமை ஏற்று ஓராண்டு நிறைவெய்தியது பற்றி, கிழக்காசிய இந்தியர்கள் அகமகிழந்து கொண்டாடிய நேத்தாஜி வார விழாவின்போது நேத்தாஜி சுபாஸ் சந்திர போஸ் ஆற்றிய சொற்பெருக்கு)
FILE
பன்னிரண்டு மாதங்களாக நமது சுதந்திர இயக்கம் வெகு தூரம் முன்னேறியிருக்கிறது. இந்தியாவில் இருபது ஆண்டுகளாக ஊழியம் செய்து அனுபவம் பெற்றிருப்பதால், இங்கு நடந்துள்ள வேலைகளின் மதிபையும் தரத்தையும் என்னால் சரியாக அளவிட முடியும். என்னுடன் ஒத்துழைத்த உங்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றி.
இன்னும் உங்கள் முன் பல வேலைகள் இருக்கின்றன. உத்சாகத்துடனும் உறுதியுடனும் ஆள், பணம், பொருள் இவைகளைச் சேகரிப்பது அவசியம். இவைகளைச் சேகரிக்கும்போது பல சிக்கல்கள் குறுக்கிடும். அவைகளை உடைத்தெறிது கொண்டுதான் நாம் முன்னேற வேண்டும். மற்றபடி விடுவிக்கப்பட்ட இந்நதியாவில் நிர்வாகம், புனருத்தாரணம் ஆகிய வேலைகளுக்கும் ஆண், பெண் இரு பாலரும் தேவை.
பர்மாவிலிருந்து நம் எதிரிகள் பின் வாங்கும்போது கையாண்ட முறைகளை, அதாவது சுட்டெரிக்கும் கொள்கையை இந்தியாவிலும் அவர்கள் கையாளலாம். அப்படி நேர்ந்தால் அந்த நிலைமையைச் சமாளிக நாம் தயாராகி விடவேண்டும். எல்லாவற்றையும் விட மிக முக்கியமான பிரச்சினை ஒன்று இருக்கிறது. நம் யுத்தக் களத்துக்குச் சங்கிலித் தொடர்போல் உதவிப் படைகளையும், போருக்கு அவசியமான சாதனங்களையும் அனுப்புவதே அப்பிரச்சனை. இந்தப் பிரச்சனையில் தவறினால், போர் முனையில் பெறும் வெற்றியும், அதன் பாதுகாப்பும் இந்தியாவினுள்ளே நுழைய வேண்டுமென்ற எண்ணமும் நிறைவேறாது போய்விடும்.
இந்திய விடுதலைப் போரின் அடித்தளம் கிழக்காசியா. அதிலும் பர்மா முதன்மையானது. இந்த அடித்தளம் பலமுள்ளதாக இருந்தால்தான், போர் முனையிலுள்ள துருப்புகள் வெற்றி பெற முடியும். உள் நாட்டின் நிலைமையும் நன்றாகப் பாதுகாக்கப்பட வேண்டும். நம்மை எதிர்நோக்கியிருக்கும் மாதங்களில் போர் முனையிலும், இந்தியாவிலும் புரட்சியை உண்டு பண்ணுவதிலேயே முழுக் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அந்த வேலைக்காக நானும் யுத்த சபையிலுள்ள எனது சகாக்களும் செல்ல நேரிடலாம். அப்பொழுது நீங்கள் இங்கே செய்ய வேண்டிய வேலைகளைக் குறைவின்றிச் சிறப்பாக நிறைவேற்றுவதன் மூலம் எங்களைப் பூரண திருப்தி செய்வீர்களென நம்புகிறேன்.
நமது பகைவனின் பிரச்சாரத் தந்திரங்கள் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அந்தத் தந்திரங்கள் நமக்கு விரோதமானவை மட்டுமல்ல; வேடிக்கையுங் கூட. முதன் முதலில் நம் இராணுவம் ஒன்றிருப்பதையே அலட்சியம் செய்தார்கள், பின்னர் அதை அங்கீகரிக்காமலிருக்க அவர்களால் முடியவில்லை. அரக்கானில் அவர்களுக்கு நாம் கொடுத்த உதை அந்த அலட்சிய புத்தியை உடைத்து விட்டது. நாம் இந்தியாவிற்குள் நுழைய முடியாதென்று கதறியெதல்லாம், நாம் மணிப்பூர் - அஸ்ஸாம் எல்லைகளில் நுழைந்துதும் உலகத்தாரிடம் செல்லாக் காசாகிவிட்டன.
FILE
இந்த அவமானத்தால் நம் பகைவர்களும், அவர்களுக்குத் துணையாக நின்று கூலிக்கு மாரடிக்கும் நமது சோணகிரிகளும் சத்தம் கலங்கி வாயில் வந்தபடி உளர ஆரம்பித்தனர். இப்பொழுது என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா? நமது இராணுவம் ஓர் பொம்மலாட்டமாம்! நாம் டில்லிக்குச் செல்ல முடியாதாம்! மணிப்பூரிலிருந்து டில்லிக்கு வெகு தூரம் இருக்கிறதாம்! இந்தியப் பூகோள நூல் நமக்குத் தெரியாதென நினைத்துவிட்டார்களோ என்னமோ? அவர்களை விட நமக்குத்தான் நன்றாகத் தெரியுமே, மணிப்பூரிலிருந்து டில்லிக்கு எவ்வளவு தூரமோ அதைவிட அதிக தூரத்தை நமது படைகள் இதுவரை கடந்துவிட்டன.
இன்னும் உயரமான குன்றுகள், ஆழமான பள்ளத்தாக்குகள், அகலமான குன்றுகள் இருக்கின்றன. எத்தனை நாள்தான் கரடுமுரடான வழியாக இருந்தாலும் அவையனைத்தையும் தாண்டிச் செல்லவும், எவ்வளவு நீண்ட தூரத்தையும் கடந்து விடுவும் நமது படைகள் தயாராகிவிட்டன. பகைவர்கள் செய்கின்ற ஏளனம், நமக்கு நேரிய பாதையை காட்டுவதோடு திட நம்பிக்கையையும் அளிக்கிறது. ஏளனம் செய்வதை நிறுத்திவிட்டு, என்றைக்கு நம்மை அவர்கள் புகழத் தொடங்கிறார்களோ அன்றுதான் நமக்குத் கெடுதி நேரிடும். நமது வேலைகள் யாவும் மிகத் திறமையானதும் சிறந்ததாகவும் இருப்பதால்தான் அவர்கள் கண்களுக்கு நாம் தூஷிக்கப்படத் தகுந்துவர்களாகிறோம். அவர்கள் தூஷணை நமக்கும் பெருமை. ஆதலால் அவர்களை நாம் போற்றுகிறோம்.
நண்பர்களே! உங்களிடம் சில தினங்களுக்கு முன் சில கோரிக்கைகள் விடுத்தேன். நம் சர்வாம்சப் படைத் திரட்டலுக்கு நீங்கள் முழு ஆதரவு கொடுத்தால் உங்களுக்காக இரண்டாவது போர் முனையைத் திறந்துவிடுகிறேனென்று உறுதி கூறியிருந்தேன். அந்த உறுதி மொழியை இப்பொழுது நிறைவேற்றி விட்டேன். நமது போரின் முதற் படலம் முற்றுப் பெற்று விட்டது. நமது வெற்றி வீரர்களுடன் நிப்பானிய வீரர்களும் ஒருமித்து நின்று போர் புரிகின்றனர். இப்போழுது பகைவர்களைப் புறங்காட்டியோடச் செய்து கொண்டே இந்திய மண்ணில் நம் வீரர்கள் போரிடுகின்றனர். இந்த நேரம் உங்கள் கடமையை நிறைவேற்ற கச்சையை வரிந்து கட்டுங்கள். ஆள், பணம், பொருள் எல்லாம் அதிகாகத் தேவை. அவைமட்டுமல்ல, கொண்ட இலட்சியத்தை நிறைவேற்றியே ஆக வேண்டுமென்ற மனோ திடமும் நம்மிடம் உறுதியாக இருக்க வேண்டும். அந்த உறுதி தான் வீரச் செயல்களுக்கும் பழுதில்லா வெற்றிக்கும் பூரண சக்தியைக் கொடுக்கும்.
சுதந்திரம் நம் கண்ணுக் கெட்டிய தூரத்தில் இருக்கிறது. சுதந்திர இந்தியாவை உயிரோடிருந்து பார்க்க வேண்டுமென்று நினைத்தால், அது சகிக்க முடியாத ஆபத்தைத் தருகின்ற பெரும் தவறேயாகும். பிழைத்திருந்து சுதந்திரத்தைக் காண வேண்டுமென்ற நினைப்பும் யாருக்கும் இருக்கக் கூடாது. இன்னும் கடுமையானதும் நீண்டதுமான போர் நம்மை எதிர்நோக்கியிருக்கிறது. ஆதலால், இந்தியா நீடுழி வாழ உயிர்த் தியாகம் செய்ய வேண்டுமென்ற ஆவல்தான் வேண்டும்.
சுதந்திரப் பாதை நமது இரத்தத்தால் நிரம்ப வேண்டும், அதன்மூலம் வீர மரணம் நமக்கு வேண்டும். நண்பர்களே! உங்களிடம் ஒன்று கேட்கிறேன். உங்கள் இரத்தத்தைக் கொடுங்கள், இரத்தத்திற்கு இரத்தத்தாலேயே பழிதீர்க்க முடியும். இரத்தம்தான் சுதந்திரத்தின் விலை. என்னிடம் இரத்தம் கொடுங்கள்; உங்களுக்குச் சுதந்திரம் கொண்டு வருகிறேன். இது சத்தியம்.