பிரிட்டிஷ் படையில் விசுவாசமிக்க வீரர்களாக பணியாற்றிய பல்லாயிரக்கணக்கான இந்தியர்களில் ஒருவரான மங்கள் பாண்டே, பிரிட்டிஷாரின் வெற்றிக்காக இன்னுயிரைத் தந்தும், அவர்களை மதிக்காத அதிகாரிகளின் நடத்தையை கண்டு வெகுண்டெழுந்தார்.
ஆகானிஸ்தானில் நடந்த போரின் போது தங்களை கேவலமாக நடத்தியதை எதிர்த்த ஒரு இந்து சிப்பாயையும், முஸ்லிம் சிப்பாயையும் ஒழுக்கத்தைக் காரணம் காட்டி சுட்டுக் கொன்றதை மங்கள் பாண்டே எதிர்த்தார்.
தங்களுடைய தியாகத்தையும், பண்பாட்டையும் மதிக்காத பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்யுமாறு தனது சகாக்களைத் தூண்டினார் மங்கள்பாண்டே. அதுவே அவர் தூக்கிலிடப்பட்ட 2 மாதங்களுக்குப் பின் பிரிட்டிஷாருக்கு எதிரான சிப்பாய்கள் புரட்சியாக வெடித்தது.
தனது மேலதிகாரியைத் தாக்கினார் என்று குற்றம் சாற்றப்பட்டு 1857 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி மங்கள்பாண்டே தூக்கிலிடப்பட்டார்.
மங்கள் பாண்டேயின் துணிச்சலும், வீர மரணமுமே சிப்பாய் கலகம் எனும் முதல் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டது.
14. சிப்பாய் கலகம் என்று அழைக்கப்பட்ட முதல் சுதந்திரப் போர் (1857)
1800 முதல் 1850 வரை தங்கள் ஆதிககத்தை வலிமையாக நிலைப்படுத்திக் கொண்ட பிரிட்டிஷ் - இந்திய அரசு கடைபிடித்த வரிக்கொடுமையால் இந்திய மக்களின் சராசரி வாழ்வு பெரும் சோதனைக்குள்ளானது.இந்த காலக்கட்டத்தில் மழை பொய்த்ததால் பல ஆண்டுகள் பஞ்சத்தால் மக்கள் அவதியுற்றக் காலத்திலும் தாங்கள் வசூலித்து வந்த வரியை எந்த விதத்திலும் குறைத்துக் கொள்ளாதது மட்டுமின்றி, ஜமீன் முறையை நடைமுறைப்படுத்தி வலுக்கட்டாயமாக வசூல் செய்ததால் குமுறிக் கொண்டிருந்த மக்களின் கோபமே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக உருவான 1857 சிப்பாய் கலகம் என்று அழைக்கப்பட்ட முதல் சுதந்திரப் போராட்டமாகும். சிப்பாய் கலகம் அல்ல.... சுதந்திரப் போராட்டம்!
இந்த சிப்பாய் கலகம் பிரிட்டிஷ் ஆட்சியை நிலைக்குலையச் செய்தது. வானுள்ளவரை, கடல் நீருள்ளவரை பிரிட்டீஷ் சாம்ராஜ்ஜியம் நிலைத்திருக்கும் என்ற அவர்களின் கனவில் மண் அள்ளிப் போட்டது சிப்பாய் புரட்சியாகும். 1857ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் தேதியன்று மீரட் சிறையில் அடைக்கப்பட்ட தங்களது சகாக்களை விடுவித்த சிப்பாய்கள் ஆங்கிலேய அதிகாரிகளை வெட்டிக் கொன்றனர். மீரட்டில் இருந்து டெல்லியை நோக்கி படை புறப்பட்டது... ஆட்சியைக் கைப்பற்ற....
இந்த புரட்சிக்கு வித்திட்டது இளம் சிப்பாய் மங்கள் பாண்டேயின் வீரமாகும்.
15. வனவாசிகள் கிளர்ச்சி (1835 - 1855)
பீகார், வங்க மாநிலங்களில் பரவலாக வாழ்ந்து வந்த பழங்குடியினர், தங்களைப் பிழிந்தெடுத்த பிரிட்டிஷ் அரசாட்சியை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
பழங்குடியினருக்கு எதிராக பிரிட்டிஷ் அரசு பிறப்பித்த நியாயமற்ற உத்தரவுகளை எதிர்த்து நடந்த இந்தப் போராட்டம் சந்த்தால் கிளர்ச்சி என்றழைக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேல் நடந்த இந்தக் கிளர்ச்சிக்கு தலைமை வகித்த சித்தோ, கானோ ஆகியோர் பிரிட்டிஷ் படையினரால் கொல்லப்பட்டனர்.
இதே நேரத்தில் தற்பொழுது ஜார்க்கண்ட் என்றழைக்கப்படும் பீகாரின் தென் பகுதியில் முண்டா இன பழங்குடியினரும் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சி செய்தனர். இவர்களின் தலைவர் பிர்க்கா முண்டா சிறையில் உயிர் துறந்தார்.
16. சுதேசி இயக்கங்களின் தோற்றம்
இந்தியாவில் தங்களின் காலனி ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டுமெனில் இந்நாட்டின் சமூக அமைப்பையும, பண்பாட்டையும் சிதைக்க வேண்டும் என்ற அழுத்தமான முடிவுடனேயே மெக்காலே ஆங்கில கல்வி முறை புகுத்தப்பட்டது.
இதனை நன்கு புரிந்துகொண்ட நமது நாட்டின் தத்துவ, பண்பாட்டுத் தலைவர்களான ராஜாராம் மோகன்ராய், 1828 ஆம் ஆண்டு பிரம்ம சமாஜத்தை நிறுவினார்.
சுவாமி தயானந்த சரஸ்வதி 1875ல் பம்பாயிலும், 1877ல் லாகூரிலும் ஆரிய சமாஜத்தை துவக்கினார். வேதத்திலும், உபநிஷத்துக்களிலும் மக்களுக்கு இருந்த நம்பிக்கை இவ்வியக்கங்களால் வலிமை பெற்றது.
1879 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி அந்நியப் பொருட்களை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்த சுவாமி தயானந்த சரஸ்வதி, சுதேசி இயக்கத்திற்கு வித்திட்டார்.
இந்தியாவின் தத்துவ விசாரணை வேரைக் காக்க சென்னை அடையாறில் தியோசஃபிக்கல் சொசைட்டியை நிறுவினார் விடுதலைப் போராட்டத் தலைவர்களில் ஒருவரான அன்னிபெசன்ட்.
17. இந்திய தேசிய காங்கிரஸ் துவக்கம்
சிப்பாய் கலகத்தைத் தொடர்ந்து நாட்டில் ஆங்காங்கு சிறிதும் பெரிதுமாக பிரிட்டிஷ்-இந்திய அரசை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. அதுவரை சிற்றரசர்களும் சிப்பாய்களும் எதிர்த்து வந்த நிலை மாறி வெள்ளையர் கொண்டு வந்த கல்வி முறையில் படித்துத் தேறிய புத்திசாலி சமூகம் ஒன்றும் இந்தியாவில் உருவானது. நன்கு படித்தவர்கள் பிரிட்டிஷ் அரசாட்சியை எதிர்த்து புத்தி பூர்வமாக போராடத் துவங்கினர்.
இந்த நிலையில்தான் அப்படிப்பட்ட எதிர்ப்பை திசை திருப்பவும், அதனையே தங்களுக்கு சாதகமான கருவியாக மாற்றவும் இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது. இதனை ஆக்டேவியன் ஹ்யூம் என்ற வெள்ளையர்தான் துவக்கினார்.
தங்களுக்கு சாதகமான கருத்தை உருவாக்கவும் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டவும் ஒரு வெள்ளையர் துவக்கிய காங்கிரஸ் பின்னாளில் பிரிட்ஷ் அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும் மக்கள் இயக்கமாக வளர்ந்தது.
இந்த காங்கிரஸ் இயக்கத்தில்தான் மிதவாதத்தின் தலைவர்கள் என்றழைக்கப்பட்ட மோதிலால் நேருவும், கோபாலகிருஷ்ண கோகலேயும் இணைந்து, பிரிட்டிஷ் அரசமைப்பிற்கு உட்பட்டு நமது உரிமைக்கு குரல் கொடுக்க முன்வந்தனர்.
18. விவசாயிகள் நடத்திய அவுரிச் செடி கிளர்ச்சி (1862)
1850ஆம் ஆண்டுகளில் வங்கத்தில் உள்ள விவசாய மக்களை தாங்கள் உற்பத்தி செய்யும் துணிகளுக்கு சாயத்தை உருவாக்க அவுரிச் செடி (இன்டிகோ) பயிரிடுமாறு பிரிடீஷார் வலியுறுத்தினர். தங்களுடைய துணி வர்த்தகத்தைய அதிகரிக்கவும், வரி வருவாயை பெருக்கிக் கொள்ளவும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூறிய இத்திட்டத்தை எதிர்த்து 1862ல் வங்க விவசாயிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
19. குரு ராம்சிங்கின் பஞ்சாப் கிளர்ச்சி (1865 - 1875)
வெள்ளையர்களின் ஆட்சியை எதிர்த்து பஞ்சாபில் சீக்கிய மதக் குருக்களில் ஒருவரான குரு ராம்சிங் கூக்கா ஆயுத போராட்டத்தை துவக்கினார். தங்களுடைய போராட்டத்திற்குத் தேவையான ஆயுதங்களை ரஷ்யாவிடம் இருந்து பெருவதற்கு குர்ஷாரன் சிங்கை அனுப்பி வைத்தார். இந்தப் போராட்டத்தை பிரிட்டிஷ் ராணுவம் காட்டுமிராண்டித் தனமாக அழித்தது என்று வெரெஷ்ஜோசின் என்ற ரஷ்யர் விளக்கியுள்ளார்.
போராட்டக்காரர்களை பிடித்து பீரங்கி வாயிலில் கட்டி அவர்களின் உடலை வெடித்துச் சிதறடித்ததாக வெரெஷ்ஜோசின் கூறியுள்ளார்.
20. தேசக் கீதத்தைப் பாடிய ராஜ்நாராயண் பாசு (1872)
இந்தியாவின் விடுதலை, இந்தியப் பண்பாட்டின் வீரியத்துடனும், வெள்ளையன் அளித்த ஆங்கில மொழிப் பலத்துடனும் அந்த மொழியின் வாயிலாகக் கிட்டிய உலக நடப்புகளை அறிந்த அறிவாற்றலாலும் செரிவூட்டப்பட்டது. இப்படிப்பட்ட அறிவைப் பெற்ற மக்களிடையே விஷ்ணு ஹரி சிப்லும்கார், ரானடே, கோபால் கணேஷ் அகார்கர், ஜோதிராவ் பூலே, குஜராத்தின் ஜாவேத் சந்த் மெகானி, வங்கத்தின் தீனபந்து மித்ரா, முகுந்த் தாஸ், ரஜினிகாந்த், ராஜ்நாராயண் பாசு ஆகியோர் படித்த இந்தியர்களிடையே தேச உணர்வைத் தூண்டினர்.
இவர்களின் ராஜ்நாராயண் பாசு 1872ல் தனது பார்வையில் இந்தியா என்று நமது நாட்டின் பெருமைகளைப் புகழ்ந்து முதல் தேசக் கீதத்தை பாடியுள்ளார். இவர் இந்நாளில் இந்திய விடுதலைக்கு வேகமூட்டிய அரவிந்த கோஷின் தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.
21. வந்தே மாதரத்தை இயற்றிய பங்கிம் சந்ரா (1876)
இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒன்று சேர்க்கும் உணர்வாகவும், இந்திய மக்களை அந்த மாபெரும் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டிய மொழியாகவும் வெள்ளையரை அச்சத்தில் ஆழ்த்திய மந்திரமாகவும் திகழ்ந்த வந்தே மாதரம் என்ற வாழ்த்தொளியுடன் கூடிய பாடலை பங்கிம் சந்த்ர சாட்டர்ஜி 1876ஆம் ஆண்டு இயற்றினார். இந்திய விடுதலை உணர்வை ஒவ்வொருவரின் இதயத்திலும் தட்டி எழுப்பியது வந்தே மாதரம் என்று சிறீ அரவிந்தர் வர்ணித்துள்ளார்.
22. அரபிந்த கோஷ் இந்தியா வருகை (1892)
இங்கிலாந்திற்கு படிக்கச் சென்று பல மொழிகளைக் கற்றுத் தேறி உலக வரலாற்றையும் பல்வேறு சித்தாந்தங்களையும் கற்றுத் தேறி பிரிட்ஷார் நடத்திய ஐசிஎஸ் தேர்வில் வெற்றிபெறக் கூடாது என்ற திட்டத்துடன் குதிரை ஏற்றத் தேர்விற்கு செல்லர்மல் தவிர்த்த சிறீ அரவிந்தர், 1892ஆம் ஆண்டு இந்தியாவில் கால் பதித்தார்.
மும்பை திரும்பிய அரபிந்த கோஷ் தனது நண்பர் நடத்தி வந்த காங்கிரஸ் ஆதரவு இதழில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து பழைய விளக்குகளுக்குப் பதில் புதிய விளக்குகள் என்ற தலைப்பில் பல கட்டுரைகள் எழுதினார். காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களின் தழுவல் நழுவல் போக்குகளை கண்டித்து அரபிந்த கோஷ் எழுதிய கட்டுரை இளைஞர்கள் மனதில் பிரிட்டிஷாருக்கு எதிரான எதிர்ப்புத் தீயை மூட்டியது.
இந்திய விடுதலைக்குத் தலைமை ஏற்று சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய பாலகங்காதர் திலகருடன் அரபிந்த கோஷ் இணைய காங்கிரசுக்குள் தேசியவாதிகள் என்று அழைக்கப்பட்ட (வெள்ளையர்களால் தீவிரவாதிகள் என்று அழைக்கப்பட்ட) தனிப்பிரிவு துவங்கியது.
வெள்ளையரை அடித்து விரட்ட வேண்டும் என்கின்ற கொள்கையைக் கொண்ட இவர்களின் சித்தாந்தம் இளைஞர்களிடையே காட்டுத் தீயாய் பரவியது. வெள்ளையரை எதிர்த்து ரகசிய இயக்கங்கள் (பவானி மந்திர், துர்கை படை) தோன்ற ஆரம்பித்தன.
மராட்டியத்தில் 1890 ஆம் ஆண்டுகளில் வாசுதேவ் பல்வந்த் பல்கே என்பவரின் தலைமையில் வெள்ளையருக்கு எதிரான புரட்சிகர போராட்டங்கள் நடந்தது.
வெள்ளையர்களை விரட்ட ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள், அங்கு மக்களை துன்புறுத்திய புனே மாவட்ட ஆட்சியரை வெட்டிக் கொன்றனர். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தூக்கிலிடப்பட்டனர்.
புனே ஆட்சியர் ரான்ட் கொல்லப்பட்டதற்காக சபேகார் சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டதைக் கண்டு வெகுண்ட இளைஞர் விநாயக் தாமோதர் சவார்க்கர் நாசிக்கில் மித்ர மேலா, அபினவ் பாரத் என்ற இரண்டு ரகசியப் புரட்சி இயக்கங்களை துவக்கினார்.
அபினவ் பாரத் அமைப்பில் ஏராளமான இளைஞர்கள் சேர்ந்தனர். அப்பொழுது வெளிநாடு சென்று படிக்க அவருக்கு உதவித் தொகை கிட்டியது. படிப்பதற்கும், தனது ரகசிய இயக்கத்திற்கான உதவிகளைப் பெறுவதற்கும் வெளிநாடு சென்றார் சவார்க்கர்.
சவார்க்கர் துவக்கிய அபினவ் பாரத் இயக்கத்தைச் சேர்ந்த மதன் லால் திங்ரா என்ற இளைஞர் சர் வைலி என்கின்ற வெள்ளையரை வெட்டிக் கொன்றார். புரட்சியாளர்களை வதைத்த நாசிக் மாவட்ட ஆட்சியர் ஜாக்சன் என்பவரை ஆனந்த் லஷ்மண் கொலை செய்தார். இந்த இரண்டு இளைஞர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
25. புரட்சியற்ற போராட்டப் பாதை
வன்முறையைத் தவிர்த்து விடுதலை என்பது மக்களின் உரிமை எனும் அடிப்படையில் அவர்களை தட்டியெழுப்பும் அமைப்பே சுரேந்திரநாத் பானர்ஜியின் பெங்கால் இந்தியர்கள் சங்கம், நீதிபதி மஹாதேவ் ரானடேயின் சர்வ ஜனிக் சபா, கவிஞர் சுப்ரமணிய பாரதியின் மதராஸ் மகாஜன சபா, மும்பையில் பெரோஷா மேத்தாவின் மும்பை மாகாண சங்கம் ஆகியன 1880களில் உருவாக்கப்பட்டது.
1883ல் வெள்ளை அரசு உருவாக்கிய இல்பர்ட் சட்ட வரைவு, இந்தியர்கள் அல்லாத மற்றவர்களை தண்டிக்கும் உரிமை இந்திய நீதிபதிகளுக்கு இல்லை என்று கூறியது. இதனை எதிர்த்து இந்திய சட்ட வல்லுநர்கள் இவ்வமைப்புகளை உருவாக்கி வெள்ளை அரசுக்கு எதிராக போராடினர். இதே நேரத்தில்தான் அன்னியப் பொருட்களை நிராகரித்தல் போராட்டமும் வெடித்தது.
26. மெக்காலேயின் ஆங்கில கல்வி முறை இந்தியாவில் அறிமுகம்
வெள்ளை அரசுக்கு நாடு முழுவதும் அனைத்துத் துறைகளிலும் எதிர்ப்பு வலுப்பெற்ற இந்தக் காலக்கட்டத்தில்தான் ஆங்கிலக் கல்வி முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பாபிங்டன் மெக்காலே என்ற வெள்ளையர் இந்திய பாரம்பரிய கல்வி முறையை கிராமத்தில் இருந்து நகரங்கள் வரை ஒழித்திட வேண்டும் என்கின்ற திட்டத்துடன் ஆங்கிலக் கல்வி முறையை அறிமுகப்படுத்தினார்.
ஆங்கிலக் கல்வி முறையின் நோக்கம் என்ன? இதோ பாபிங்டன் மெக்காலேயின் பார்வையில்...
"இந்திய தோலுடனும், தோற்றத்துடனும் ஆனால் இதயத்தில் பிரிட்டிஷ்காரனாக இருக்க வேண்டும்."
பிரிட்டிஷாரின் இத்திட்டம் எந்த அளவிற்கு வெற்றி பெற்றது என்பதை இன்றளவிலும் நமது வாழ்க்கை, கல்வி, பண்பாடு, பார்வை ஆகியவற்றில் எந்த அளவிற்கு அதன் கலப்பு உள்ளது என்பதே சாட்சி. வெள்ளையர்கள் வெளியேறிய பின்னரும் அவர்கள் நம்மை அடிமைகளாக்க விட்டுச் சென்ற கல்வி முறை நம்மைப் பற்றிக் கொண்டுதான் நின்று கொண்டிருக்கிறது.