மருத்துவ நல நெறிமுறைகள்: தேச மனித உரிமை ஆணையம் உருவாக்குகிறது!

வெள்ளி, 4 செப்டம்பர் 2009 (12:54 IST)
நோயாளிகளுக்கு உரிய மருத்துவத்தை அளிப்பது, அவர்களை முறையாக நடத்துவது, அவர்கள் நன்கு குணமடையும் வரை மருத்துவமனையில் வைத்து காப்பது ஆகியனத் தொடர்பான மருத்துவ நல வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தேச மனித உரிமை ஆணையம் முயற்சித்து வருகிறது.

மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் உள்ளிட்ட கொடும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை மிக கவனமாக கண்காணிக்கவும், அவர்கள் முழுமையாக நலம் பெற உரிய மருத்துவ வசதிகளைப் பெறவும் வழி வகுக்கும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள், ‘நோயாளிகளின் உரிமைகள்’ என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருவதாக தேச மனித உரிமை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மன நலம் பாதிக்கப்பட்டோர் மீது நடத்தப்படும் ‘மீறல’களை அடுத்து இப்படிப்பட்ட ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் முடிவை மனித உரிமை ஆணையம் மேற்கொண்டுள்ளது.

மராட்டிய மாநிலம் பூனேயில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய தேச மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் பி.சி. சர்மா, “நீண்ட கால சிகிச்சை தேவையுடன் மருத்துவமனையில் உள்ள பல மன நல நோயாளிகள், அவர்களின் மறுவாழ்விற்கான எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படாத நிலையில் வெறுமனே மருத்துவமனைகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்