கணவன்-மனைவிக்கு இடையேயான விவாகரத்து வழக்கு ஒன்றை விசாரணை நடத்திய டெல்லி உயர் நீதிமன்றம், பெரும்பாலான தம்பதிகள் தங்களுக்குள் தகராறு செய்யும் நிலையில் குழந்தைகளின் மனோநிலை, உடல்ரீதியான பாதிப்புகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்று கூறியுள்ளது.
குழந்தைகளின் மனோரீதியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் பெற்றோர் கவலை கொள்வதில்லை என்றும் நீதிபதி காம்பீர் அண்மையில் அளித்த தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளார்.
பெற்றோரின் விவாகரத்து காரணமாக அதிகம் பாதிப்புக்குள்ளாவது குழந்தைகளே என்றும், தாய்-தந்தை இருவரில் யாராவது ஒருவரின் அன்பு, கவனிப்பு மற்றும் ஆதரவை அந்த குழந்தைகள் இழப்பதுடன், யாருடன் அவர்கள் வாழ்கிறார்களோ அவர்களின் வெறுப்புக்கும் ஆளாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது பிரிந்து வாழும் தாயுடன் வளரும குழந்தை மீது அக்குழந்தையின் தந்தை மீதான தனது கோபத்தை எல்லாம் வெளிப்படுத்தும் தாயைப் பார்க்கிறோம். குழந்தையின் மீதான தாய் அல்லது தந்தையின் கட்டுப்பாடு அதிகரிப்பதாலும் அவர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தங்களின் பெற்றோருக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளால் குழந்தைகளின் நடத்தையில் மாற்றம் ஏற்படுவது கவலையளிக்கக்கூடியது என்று நீதிபதி காம்பீர் அளித்த உத்தரவில் கூறியுள்ளார்.
விவாகரத்து கோரும் பெற்றோரின் குழந்தைகள்,. விவாகரத்துக்கு முன்னரும், விவாகரத்து கிடைத்த பிறகும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். அதாவது கணவன் - மனைவி (தாய்-தந்தை) இடையே நிகழும் எதிர்மறையான உரையாடல்களை நேரடியாகப் பார்க்கிறார்கள். விவாகரத்துக்குப் பிறகு பல வாழ்க்கைத் தடைகளையும் சம்பந்தப்பட்ட குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டி வருவதாக நீதிபதி காம்பீர் தெரிவித்துள்ளார்.
விவாகரத்து வழக்கு ஒன்றில், மனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தைத் தொடர்ந்து, தனது மகளை தன்னுடன் இருக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒருவர் தொடர்ந்த மனுவை விசாரித்து அளித்த தீர்ப்பில் காம்பீர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த 7 ஆண்டுகளாக கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு, மகளை தங்களுடன் இருக்க உத்தரவிட வேண்டும் என்று மனுக்களை தாக்கல் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.