கருப்பை கட்டிகளுக்கு நவீன எண்டோஸ்கோபி சிகிச்சை

வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (21:14 IST)
பெண்களின் கர்ப்பப் பை கட்டிகளை எண்டோஸ்கோபி மூலம் அறுவைசிகிச்சை செய்வது, கர்ப்பப் பைக்குச் செல்லும் குழாயில் உள்ள அடைப்பை சரிப்படுத்துவதற்கான மருத்துவ முறையில் நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் உருவாகியுள்ளன.

எண்டோஸ்கோபி எனப்படும் கேமிரா மூலமான அறுவை சிகிச்சைக்குப் பின் கர்ப்பம் அடைவோர் விகிதம் 60-70 விழுக்காடாக உள்ளது தெரிய வந்திருப்பதாக பிரபல மகப்பேறு, லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் அபினிபேஷ் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

உலகில் குழந்தைப் பேறு இல்லாத பெண்களில் சுமார் 30-40 விழுக்காட்டினருக்கு கர்ப்பக் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பே காரணமாக உள்ள நிலையில், எண்டோஸ்கோபி சிகிச்சையானது நல்ல பலனைத் தருவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

புதிய தொழில்நுட்பம் மூலம் கருப்பையில் செலுத்தப்படும் நுண்ணிய கேமரா மற்றும் சாஃப்ட் வயர் மூலம் கோளாறுகள் கண்காணிக்கப்பட்டு, கட்டி இருப்பின் அதனை சிறிய கட்டிகளாக்கி வெளிக்கொண்டு வரப்படுகிறது.

இதனால் கருப்பை குழாயில் அடைப்பு நீங்கி குழந்தை பிறப்பு சாத்தியப்படுத்தப்படுகிறது.

இந்த முறையில் சுமார் 10 முதல் 15 செ.மீ. விட்டம் கொண்ட கட்டிகளைக் கூட வெளியேற்ற முடியும். இதனால் அதிக இரத்தப்போக்கு, வலி, அதிகநாட்கள் மருத்துவமனையில் தங்கியிருத்தல், குணமாவதில் தாமதம் போன்றவை தவிர்க்கப்படுவதாகவும் டாக்டர் சாட்டர்ஜி குறிப்பிட்டார்.

ஏற்கனவே இந்த எண்டோஸ்கோபி மூலமான கர்ப்பப்பை கட்டி அறுவை சிகிச்சை முறை இருந்த போதிலும், தற்போது அந்த முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கர்ப்பப்பை அடைப்பை சரி செய்தல், கருப்பை கட்டிகளை எண்டோஸ்கோபி மூலம் அகற்றுவதற்கு இந்தியாவில் குறைந்தது 18 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்