மூலிகை மருந்து - பல்கலை ஆராய்ச்சி!

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (15:21 IST)
மூலிகை மருந்துகளை வர்த்தக ரீதியாக பிரபலப்படுத்தும் ஆய்வை வித்யாசாகர் பல்கலைக் கழகம் மேற்கொள்கிறது.

மூலிகை மருந்துகள் பல்வேறு வியாதிகளை குணப்படுத்துகின்றது. இவை பரம்பரை பரம்பரையாக குறிப்பிட்ட சிலரால் மட்டும் தயாரித்து, அவர்களிடம் வரும் நோயாளிகளுக்கு மட்டும் தரப்படுகிறது. இந்த சூழ்நிலையை மாற்றி வர்த்தக ரீதியாக மூலிகை மருந்துகளை பிரபலப்படுத்தும் முயற்சியில் வித்யாசாகர் பல்கலைக் கழகமும், சதர்ன் ஹெல்த் இம்ப்ரூவ்மென்ட் சமீதி என்று அரசு சார தொண்டு நிறுவனமும் இறங்கியுள்ளன.

மேற்கு வங்காளத்தில் மிட்னாபூரில் வித்யாசாகர் பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. இதன் உயிரி மருந்து ஆராய்ச்சி நிலையம் பல வகை மூலிகை மருந்துகளை தயாரிப்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளும். இதன் தரத்திற்கும் பல்கலைக் கழகம் சான்றிதழ் வழங்கும்.

இதன் படி நோய் எதிர்ப்பு. ஒவ்வாமை நோய், இருமல், ஜலதோஷம் உட்பட பொதுவான நோய்களுக்கான 16 வகை மூலிகை மருந்துகளை பல்கலைக் கழகம் தயாரிக்கும்.

இதை தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் அமைந்துள்ள சதர்ன் ஹெல்த் இம்ப்ரூவ்மென்ட் சமீதி விற்பனை செய்யும். இந்த மூலிலை மருந்து மாத்திரைகளின் விலை 50 பைசாவாக இருக்கும்.

இது குறித்து பல்கலைக் கழகத்தின் பதிவாளர் ரஜ்சித் தார் கூறுகையில், மருந்து தயாரிப்பு துறையில் முதன் முறையாக பல்கலைக் கழகம் ஆராய்ச்சியிலும், உற்பத்தியிலும் ஈடுபட உள்ளது என்று தெரிவித்தார்.

இந்த மூலிகை மருந்து திட்டம் பல்கலைக் கழகத்தின் உயிரி மருந்து துறையின் தலைவர் டாக்டர் திபிதாஸ் கோஷ் வழிகாட்டுதளின் படி மேற்கொள்ளப்படும். இவர் ஏற்கனவே மூலிகையில் இருந்து நீரழிவு நோய்க்கும், ஆண்கள் கருத்தடை மாத்திரையும் தாயாரித்து புகழ் பெற்றவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்