வயதான காலத்தில் மூளை அதிகம் சுருங்குவதைத் தவிர்க்க, தீவிரமாக யோசிப்பது, ஏதாவது புதிய மொழிகளைக் கற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், மூளை சுருங்கும் தன்மை குறையும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஆஸ்திரேலியாவில் மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கை ஒன்றின்படி, மூளையை தீவிரமான செயல்பாட்டிற்கு உட்படுத்தும்பட்சத்தில், அதன் முக்கியப் பகுதி சுருங்குவது இரு மடங்கு அளவிற்கு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூளைக்கான ஜிம்னாஸ்டிக் பயிற்சியாக புதிர் போன்ற சிக்கலான விஷயங்களுக்கு தீர்வு காண்பது, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள விழைவது, போன்ற நடவடிக்கைகள் மூளை தொடர்பான நோய்களை தாமதப்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது.
நியூசவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், `மூளையை எப்போதும் பயன்படுத்துங்கள் அல்லது இழக்க நேரிடும்' என்ற கொள்கை உருவாக்கப்பட்டது.
60 வயதானவர்களிடம் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை அவர்களின் மூளைக்கு வேலை அளிக்கக்கூடிய வகையிலான கேள்விகளை அளித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
மிகவும் பரப்பரப்பாக செயல்படுவோரின் மூளையானது, அதன் முக்கிய நினைவு மையமாக விளங்கும் ஹிப்போகேம்பஸ் (hippocampus) அளவில் பெரிதாக இருந்ததாக தெரிய வந்துள்ளது.
குறைந்த மூளை செயல்பாடுகளைக் கொண்டவர்களின் ஹிப்போகேம்பஸ் அளவு 3 ஆண்டுகளில் சுருங்கியிருந்ததும் கண்டறியப்பட்டது. ஹிப்போகேம்பஸ் சிறிதாக இருப்பதால், அல்ஜிமிர்ஸ் (Alzheimer's) நோய் உருவாகும் ஆபத்து இருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்ட டாக்டர் மைக்கேல் வலன்ஸுவலா தெரிவித்துள்ளார்.
எனவே வாழ்க்கையின் பிற்காலத்தில், அதாவது 60 வயதுக்கு மேல் நடனம் ஆடுவது, நீச்சல், பயணம் மேற்கொள்தல், புதிய மொழியைக் கற்றுக் கொள்வது போன்ற சமூக மற்றும் உடற்பயிற்சி தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டால், மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதில் இருந்து தடுத்துக் கொள்ளலாம் அல்லது அதுபோன்ற நோய்களை தாமதப்படுத்தலாம் என்று அவர் கூறினார்.
முதுமைக் காலத்தை உற்சாகமாக கழிக்க வேண்டுமா? இப்போதே பரபரப்பாக இருப்பதற்குப் பழகிக் கொள்ளுங்கள்.