நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி பாமக, தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சென்னை சாலிகிராமத்தில் உள்ள மறைந்த கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று, பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு ராஜ்ய சபா சீட், 7 மக்களை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தி இருந்தது. இதனால் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் சமூக முடிவு வெட்டப்படவில்லை.
இந்நிலையில் அதிமுக தேமுதிக இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், கடலூர் என 4 தொகுதியையும், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தேமுதிக கேட்கிறது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்க அதிமுக மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பதிலாக, மதுரை தொகுதியை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.