ஜப்பானுக்கு தவிடு ஏற்றுமதி!

புதன், 20 பிப்ரவரி 2008 (18:24 IST)
எண்ணெய் எடுக்கப்பட்ட அரிசி தவிடு ஜப்பான், தென் கொரியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளது.

ஆந்திராவில் உள்ள காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து அதிக அளவு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தடை விரித்ததால், இந்த துறைமுகத்தில் வேலை இல்லாமல் முடங்கி கிடந்தது.

தற்போது மீண்டும் காக்கிநாடா துறைமுகம் சுறுசுறுப்பாக இயங்க துவங்கிவிட்டது. இதற்கு காரணம் இங்கிருந்து அதிக அளவில் எண்ணெய் எடுக்கப்பட்ட தவிடு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இது ஜப்பான், தென் கொரியா உட்பட பல நாடுகளுக்கு கால்நடை தீவனங்களுக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. முன்பு எண்ணெய் எடுக்கப்பட்ட சோயா, பாமாயில் வித்துக்களை கால்நடை பண்ணைகள் கோழி, கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வந்தன. இவை தற்போது அதிக அளவு பயோ-டீசல் தயாரிப்பதற்கு திருப்பி விடப்படுகிறது. இதனால் இதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக ஜப்பான், தென் கொரிய உட்பட பல நாடுகள் தீவனமாக எண்ணெய் எடுக்கப்பட்ட தவிட்டை பயன்படுத்த துவங்கி உள்ளன. இதனால் இந்தியாவில் இருந்து அதிக அளவு தவிடு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சத்தீஷ்கர், மேற்கு வங்காளம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் இருந்து தவிடு கொண்டுவரப்பட்டு காக்கிநாடாவில் இருந்து அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இது குறித்து கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் முகவரான அருன் சபீகர் கூறும் போது, உடனடியாக ஒரு லட்சம் டன் தவிடு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்