இந்திய விடுதலைக்கு வித்திட்ட நிகழ்வுகள்! - பகுதி 1
வியாழன், 14 ஆகஸ்ட் 2014 (21:32 IST)
இந்தியா விடுதலை பெற்று 67 ஆண்டுகள் நிறைந்துவிட்ட இந்நாளில், 200 ஆண்டுக்காலம் நமது நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளையர்களை எதிர்த்து நடந்த போர்களையும், போராட்டங்களையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்தியாவின் விடுதலைப் போராட்டம் எப்பொழுது, எங்கு துவங்கியது? என்பதை எந்த வரலாற்றாளரும் அறுதியிட்டுக் கூறவில்லை. இந்தியாவை ஆண்ட அரசர்களை அடிமைப்படுத்தியும், அவர்களின் அதிகாரத்தை ஏற்க மறுத்த அரசர்கள் மீது படையெடுத்து அழித்தும் சற்றேறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள் காலனி ஆட்சியை நமது நாட்டின் மீது திணித்த வெள்ளையர்கள், 1639 ஆம் ஆண்டு சென்னையில் கோட்டை எழுப்பி பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி என்ற பெயரில் வணிகத்தைத் துவக்கிய நாளில் இருந்தே அவர்களை எதிர்க்கும் இயக்கமும் சூல்கொண்டது.
சிறு சிறு ராஜ்ஜியங்களாக இந்தியாவை ஆண்ட அரசர்களை அணுகி அவர்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு தங்களது வணிகத்தை விரிவாக்கிக்கொண்ட பிரிட்டிஸ் கிழக்கிந்தியக் கம்பெனி, இந்நாட்டின் அரசர்களுக்கிடையே நிலவிவந்த சிறு சிறு பிரச்சனைகளை ஊதி அவர்களுக்கிடையே போரை உருவாக்கி தங்களுக்கு சாதகமான அரசர்களுக்கு (பணத்தை வாங்கிக் கொண்டு) படைகளை வழங்கி தங்கள் எதிரியை வென்று அதன் மூலம் தங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டு பிறகு அந்த அரசர்களையே அடிமைப்படுத்தி அவர்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் வரி வசூல் செய்யும் உரிமை பெற்று தங்கள் வணிக வளையத்தை அதிகார வளையமாக்கி ஆதிக்கம் செய்யத் துவங்கினர்.
இப்படி நேரடியாக வரி வசூலில் வெள்ளையர்கள் ஈடுபடத் துவங்கியதுமே அவர்களுக்கு எதிரான எதிர்ப்பும் முளைவிடத் துவங்கியது. அதுவே இந்நாட்டு விடுதலைக்கு விதைக்கப்பட்ட முதல் விதைகளாயின.
வெள்ளையரை வணிகராக ஏற்ற இந்தியச் சமூகம் அவர்களை ஆட்சியாளர்களாக ஏற்க மறுத்தது. வந்தேறிகள் நாட்டை ஆள்வதா? என்ற கேள்வி பலமடைந்து விடுதலை வேட்கையாக உருப்பெறத் துவங்கியது.
அரசர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு அடாவடியாக திரை வசூலிக்க வந்த வெள்ளையரை எதிர்த்து ஆங்காங்கு சிற்றரசர்கள் தனித்தனியாகவும், ஒன்று சேர்ந்தும் எதிர்த்தனர். இந்த எதிர்ப்புகள் போரில் முடிந்தது. அந்தப் போர்கள்தான் இந்திய விடுதலை எனும் பெரும் போருக்கு வித்திட்டது. போர்கள் பல நடந்தன. பேரழிப்பு ஏற்பட்டாலும் வெற்றி பெற்றது வெள்ளையர்களே. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி பிரிட்டிஷ் இந்திய அரசாக மாறி இந்தியாவை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பெரும் பகுதியாக மாற்றியது.
ஆனால், எதிர்ப்புகனல் அணைந்துவிடவில்லை. அது பல்வேறு வடிவங்களைப் பெற்று பிரிட்டிஷ் அரசைத் தொடர்ந்து தாக்கியது. இப்படிப்பட்ட தாக்குதல்களே இந்திய விடுதலை வரலாறானது. 200 ஆண்டுக்கால தொடர் போராட்டத்திற்குப் பின் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வீழ்த்திய அந்த வரலாற்றில் குறிப்பிடத்தக்க 60 நிகழ்வுகளை இங்கே மூன்று பகுதிகளாக தொகுத்தளித்துள்ளோம்.
1. பூலித் தேவன் (1715 - 1767)
இந்திய விடுதலைப் போரின் முதல் விதை தென்னாட்டில், அதுவும் தமிழ்நாட்டில் விதைக்கப்பட்டது. வெள்ளையரை எதிர்த்த முதல் பாளையக்காரர். சங்கரன்கோயில் அருகே உள்ள நெற்கட்டுச் சேவல் பகுதியை ஆண்ட பூலித் தேவன் ஆவார். ஆர்க்காடு நவாப்பிடம் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு அப்பகுதியில் வரி வசூலிக்க நிர்ப்பந்தம் செய்ய படையுடன் வந்து பூலித் தேவன் கோட்டையை வெள்ளைய ஆளுநர் கர்னல் ஃபெரோன் முற்றுகையிட்டான். அவனுடன் வெள்ளையர் வைத்திருந்த கூலிப்படையின் தளபதி கான்சாஹிப்பும் சேர்ந்து பூலித்தேவனை எதிர்த்தான். அந்த முற்றுகையை உடைத்து வெள்ளையரை விரட்டியடித்து வாகை சூடினார் பூலித் தேவன். இது நடந்தது 1755.
இந்த வெற்றிக்குப் பிறகு நெல்லைச் சீமையில் உள்ள மற்ற பாளையக்காரர்களைத் திரட்டி வெள்ளையருக்கு எதிராக போராடினார் பூலித்தேவன். 1750 முதல் 1761 வரை வெள்ளையர்களை எதிர்த்து பூலித்தேவன் போராடியதாக வரலாறு கூறுகிறது.
இந்தப் போருக்குப் பிறகுதான் பிளாசிப் போர் நடந்து அதில் ராபர்ட் கிளைவ் தலைமையிலான பிரிட்டிஷ் படை, ஃபிரெஞ்ச் படையை வென்றது. அதுவரை கிழக்கிந்திய கம்பெனி எனும் வணிக நிறுவனமாக இருந்த நிலை மாறி 1757 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய அரசாக மாறியது.
2. ஹைதர் அலி (1722 - 1782)
பிரிட்டிஷ் அரசை தடுத்து நிறுத்தக் களமிறங்கிய முதல் இந்திய அரசர் ஹைதர் அலி. சாதாரண தளபதியாக உயர்ந்து பிறகு 1761 ஆம் ஆண்டு மைசூரின் அரசராக முடிசூடிய ஹைதர் அலி, 1767 முதல் 1769 ஆம் ஆண்டுகளில் நடந்த போரில் வெள்ளையர் படைகளை வீழ்த்தி பெரும் வெற்றி பெற்றார்.
ஆயினும், பிரிட்டிஷ் ஆட்சி நாளுக்கு நாள் பலம் பெற்றே வந்தது. அவர்களை இந்துஸ்தானை விட்டு ஒழித்தே தீருவது என்று கங்கணம் கட்டிய ஹைதர் அலி, 1780 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு பல்வேறு முனைகளில் பிரிட்டிஷ் படைகளை வீழ்த்தி வெற்றி கண்டார்.
1782 ஆம் ஆண்டு சித்தூரில் நடந்த போருக்கு இடையே ஹைதர் அலி உயிர் நீத்தார். இந்துஸ்தானத்தை அந்நியரின் பிடியில் சிக்கி அடிமைப்பட்டுவிடாமல் தடுத்திட வேண்டும் என்று தனது மகன் திப்புவிற்கு ஹைதர் அலி எழுதிய கடிதம் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்ததாகும்.
3. மாவீரர் திப்பு சுல்தான் (1750 - 1799)
ஹைதர் அலியைத் தொடர்ந்து மைசூர் அரசரான திப்பு சுல்தான் வெள்ளையரை எதிர்ப்பதில் உறுதியோடு இருந்தது மட்டுமின்றி, வெள்ளையரை எதிர்த்து ஆங்காங்கு போராடிய மருது சகோதரர்கள், கட்டபொம்மன் உள்ளிட்ட பாளையக்காரர்கள், தீரன் சின்னமலை போன்றோருக்கு உறுதுணையாகவும் இருந்தார்.
1782 முதல் 1784 வரை மலபார் பகுதியில் நடந்த போரில் ஃபிரெஞ்ச் படைகளுடன் இணைந்து பிரிட்டிஷ் படைகளுடன் கடுமையாகப் போரிட்ட திப்பு சுல்தான், பிரிட்டிஷ் படை வீரர்கள் 4,000 பேரை சிறைபிடித்தார்.
1790 ஆம் ஆண்டு கடந்த 3வது மைசூர் போர் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கப்பட்டினம் போரில், தனது கோட்டையை முற்றுகையிட்டுத் தாக்கிய திருவிதாங்கூர், ஹைதராபாத் நிஜாம், ஆர்க்காடு நவாப் ஆகியோரின் படை பலத்துடன் போரிட்ட பிரிட்டிஷ் படைகளை திப்புவின் படைகள் எதிர்த்து கடுமையாக போர் புரிந்தன. இந்தப் போரில் பின்னடைவைச் சந்தித்த திப்பு மீண்டும் தனது படை பலத்தைப் பெருக்கிக் கொண்டு 1799 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து கடும் போர் புரிந்தார். இப்போரில் பல்லாயிரக்கணக்கான வீரர்களுடன் திப்பு சுல்தான் வீரமரணம் எய்தினார். திப்புவின் வீழ்ச்சியுடன் தென்னகத்தில் பிரிட்டிஷ் அரசிற்கு எதிரான பலம் வாய்ந்த எதிர்ப்புச் சக்தி வீழ்ந்தது.
4. சிவகங்கைச் சீமையின் எதிர்ப்பு
வெள்ளையரின் வரி வசூல் ராஜ்ஜியத்தை சிவகங்கைச் சீமையை ஆண்டு வந்த முத்து வடுகநாதர் எதிர்த்தார். 1772 ஆம் ஆண்டு காளையார் கோவிலில் நடந்த போரில் முத்து வடுகநாதர் கொல்லப்பட்டார்.
அவருடைய வேலு நாச்சியாரும், அவர்களுடைய படையில் இருந்த மருது சகோதரர்களும் தப்பியோடி, ஹைதர் அலியின் ஆட்சிக்கு உட்பட்ட விருப்பாச்சியில் அடைக்கலம் புகுந்தனர்.
5. வீரபாண்டிய கட்டபொம்மன் (1761-1799)
தமிழ்நாட்டில் வெள்ளையர்களை காலூன்ற விடாமல் எதிர்த்த போராட்ட வரலாற்றில் தென்பாண்டிச் சீமையில் பாஞ்சாலங்குறிச்சி பகுதியை ஆண்ட பாளையக்காரர்களின் எதிர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவர்களில் வீரபாண்டியக் கட்டபொம்மன் முன்னணியில் நின்றார். தனது ஆட்சிக்கு உட்பட்ட சிறீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களில் கிழக்கிந்திய கம்பெனியின் கலெக்டரான ஜாக்சன் வரிவசூல் செய்ததை கடுமையாக எதிர்த்தார் கட்டபொம்மன்.
பேசுவதற்காக அழைத்து அவமானப்படுத்திய ஜாக்சனுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த ஊர்களை சூறையாடினார் கட்டபொம்மன்.
அந்த நேரத்தில் வெள்ளையப் படைகள் திப்பு சுல்தானை எதிர்த்து மைசூரில் போரிட்டுக் கொண்டிருந்ததால் கட்டபொம்மனுடன் கிழக்கிந்திய கம்பெனி சமரசம் செய்து கொண்டது.
1799ல் மைசூர் போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டதற்குப் பிறகு பேனர்மேன் எனும் வெள்ளை அதிகாரியின் தலைமையில் வந்த கிழக்கிந்தியப் படைகள் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை முற்றுகை இட்டுத் தாக்கினர். பல நாட்கள் நடந்த போரில் இரு தரப்பிலும் பெரும் உயிரிச்சேதம் ஏற்பட்டது. தனது தளபதிகள் சுந்தரலிங்கமும், வெள்ளையத்தேவனும் போரில் வீர மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பிய வீரபாண்டியரை, வெள்ளையர்களின் நண்பனாக இருந்த தொண்டைமான் படைகள் பிடித்துத் தர, கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.
6. தூந்தாஜி வாக் (1740-1800)
மைசூர் பேரரசர் ஹைதர் அலியின் குதிரைப் படைகளின் தளபதியாக இருந்த தூந்தாஜி வாக் கர்நாடகத்தின் ஷிமோகா பகுதியை வெள்ளையரிடம் இருந்து கைப்பற்றினார். இவருடைய தலைமையில் துப்புவின் வீரர்களும் பங்கேற்க கன்னட, மராட்டியத்தின் பல பகுதிகளை தூந்தாஜி வாக் வெள்ளையர்களிடம் இருந்து மீட்டார்.
1800ம் ஆண்டில் மிகப்பெரும் படையுடன் வெள்ளையர்களை எதிர்த்து கிருஷ்ணா நதிக்கரையின் வெல்லிஸ்லீயின் தலைமையிலான படைகளுடன் தூந்தாஜிவாக் மோதினார். நீண்ட நாட்களுக்கு நடந்த இப்போரில் ஒரு வெள்ளையர்களுடன் மராட்டியப் பேஷ்வாக்களும், ஹைதராபாத் நிஜாம், மைசூர் உடையார் போன்ற அடிமைகளின் படைகளும் தூந்தாஜியின் படைகளுடன் மோதின. இப்போரில் தூந்தாஜி வாக் மரணமடைந்தார்.
7. கோபால் நாயக்கர் (1729-1801)
திப்பு சுல்தானின் ஆதரவைப் பெற்று, சிறு சிறு அரசர்களின் துணையுடன் வெள்ளையர்களை எதிர்த்து பல முனைகளில் போராடியவர் கோபால் நாயக்கர். பழனி, திண்டுக்கல் பகுதிகளுடன் இணைந்த விருப்பாச்சி எனும் பகுதியின் அரசராக இருந்த கோபால் நாயக்கர், திப்புவின் கோட்டையை வெள்ளையர்கள் முற்றுகை இட்டபோது ஆங்கிலேயர்களின் முகாம்களை தாக்கி சூறையாடினார்.
திப்பு வீழ்ந்தவுடன் அந்த படைகளை ஒன்றிணைத்துக் கொண்டு தூந்தாஜி வாக்குடன் இணைந்து வெள்ளையருக்கு எதிராக போராடிய கோபால் நாயக்கர் பல முனைகளில் வெள்ளையரை எதிர்த்து போராடி 1801ல் காட்டிக் கொடுக்கப்பட்டு வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டார்.
8. மருது பாண்டியன் சகோதரர்கள்
வீரபாண்டிய கட்டபொம்மனுக்குப் பிறகு முனை மழுங்கிப் போன வெள்ளையர் எதிர்ப்பிற்கு உயிர் கொடுத்தவர்கள் மருது சகோதரர்களாவர். 1772ல் சிவகங்கைச் சீமையின் அரசல் முத்து வடுகநாதன் வெள்ளையரை எதிர்த்து காளையார் கோயிலில் நடந்த போரில் கொல்லப்பட்ட பிறகு அவருடைய மனைவி வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களும் அங்கிருந்து தப்பி ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்த விருப்பாச்சிப் பகுதியில் 7 ஆண்டு காலம் தங்கியிருந்து படைகளைத் திரட்டி, சிவகங்கையைக் கைப்பற்றியிருந்த நவாப் படைகளை தோற்கடித்து மீண்டும் ஆட்சி அமைத்தனர்.
வெள்ளையரின் ஆதிக்கப் பரவலை எதிர்த்த போராடிய திப்பு சுல்தானில் இருந்து தூந்தாஜி வாக், கோபால் நாயக்கர் வரை பல அரசர்களுடன் தொடர்பு கொண்டு படைகளைத் திரட்டியது மட்டுமின்றி, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் தம்பிகள் ஊமைத் துறையையும் சிவத்தய்யாவையும் மீட்ட மருது சகோதரர்கள், நெல்லையில் இருந்து சிவங்கை வரை பல முனைகளில் கிழக்கிந்திய கம்பெனியின் படைகள் மீது போர் தொடுத்தனர். இப்போர்களில் வெள்ளையருக்கு பேரிழப்பு ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது.
மருது சகோதரர்கள் சிவத்தய்யாவுடன் இணைந்து வெள்ளையர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நத்தம் மேலுர் கோட்டைகளைக் கைப்பற்றியது மட்டுமின்றி, அவர்களின் ஆயுதக் கிடங்குகளையும் கொள்ளையடித்தனர்.
பலம் வாய்ந்த கம்பெனி படைகளை அவர்கள் எதிர்பாராத நேரத்தில் தாக்கி பெரும் இழப்புகளை உண்டாக்கினார். 1801ம் ஆண்டு அக்டோபர் வரை நீடித்த மருது சகோதரர்களின் கிளர்ச்சி திருப்பத்தூர் கோட்டையில் முடிந்தது. மருது சகோதரர்களும் அவர்களோடு போராடிய கிளர்ச்சியாளர்கள் 500 பேரும் திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர்.
9. தீரன் சின்னமலை (1756-1805)
நெல்லையில் இருந்து சிவகங்கைக்கும் அங்கிருந்து திண்டுக்கல் வரையும் வெள்ளையருக்கு எதிராக எழுந்த எதிர்ப்புத் தீ கொழுந்து விட்டு எரிந்த அதே நேரத்தில் கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் தற்போது ஈரோடு, பெருந்துறைப் பகுதிகளை ஆண்ட சிற்றரசர் தீரன் சின்னமலை வெள்ளையரை எதிர்த்து பல இடங்களில் போர் புரிந்தார்.
1801ல் காவிரிக் கரையில் நடந்த போரில், கர்னல் மேக்ஸ்வெல் படையைத் தோற்கடித்த தீரன் சின்னமலை, 1803ல் ஜெனரல் ஆரிசின் தலைமையில் வந்த பிரிட்டீஷ் படையைத் தோற்கடித்தார். வெள்ளையர்கள் மீண்டும் பெரும் படையுடன் வந்து இவரது கோட்டையை தாக்கி கைப்பற்ற, அங்கிருந்து தப்பிய தீரன் சின்னமலை பழனியில் காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். தீரன் சின்னமலையும் அவருடைய சகோதரர்களும் சங்ககிரி மலைக்கோட்டையில் உள்ள ஆலமரத்தில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
10. வேலூர் கோட்டை சிப்பாய் புரட்சி (1806)
தென்னாட்டின் வெள்ளையர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி தந்தது வேலூர் கோட்டையில் நடந்த சிப்பாய் புரட்சியாகும்.
திப்புவில் இருந்து தீரன் சின்னமலை வரை எதிர்த்த அரசர்கள் அனைவரும் கொல்லப்பட்டு மதராஸ், மைசூர் பகுதிகள் முழுமையாக வெள்ளையரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்ட நிலையில் தங்கள் படையில் இருந்த இந்திய சிப்பாய்களின் மீது வெள்ளை அதிகாரிகள் நடத்தி வந்த அராஜக நடவடிக்கைகளின் விளைவாகவும், வெள்ளையர்கள் மீது நமது சிப்பாய்களுக்கு இருந்த எதிர்ப்புணர்வின் காரணமாகவும் வெடித்ததுதான் வேலூர் சிப்பாய் புரட்சி.
தங்களது படையில் இருந்த இந்திய சிப்பாய்கள் மீசையைக் குறைக்க வேண்டும். கடுக்கன், காப்பு அணியக் கூடாது. தாங்கள் அளிக்கும் தொப்பியைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து இந்த கலகம் உருவானதாக கூறப்படுவது உண்மையல்ல. அதையும் தாண்டி வெள்ளையர் படையில் இருந்த இந்திய சிப்பாய்கள் ஏதாவது ஒரு கட்டத்தில் தாங்கள் வாழ்ந்த பகுதியில் இருந்த சிற்றரசரின் படைகளில் இருந்தவர்கள்தான். அவர்கள் உள்ளூர வெள்ளையரின் ஆதிக்கத்தை எதிர்த்தனர். அதற்குக் காரணம் வெள்ளையர்கள் தங்கள் நாட்டு மக்கள் மீது சுமத்திய வரிக்கொடுமை, தங்கள் பகுதியில் நிலவிய வறட்சியின் காரணமாக பிழைப்புக்கு வழியின்றி வெள்ளையர் படையில் சேர்ந்தாலும் அவர்களின் ஆதிக்கத்தை ஏற்காத மன உணர்வு ஆகியன வெள்ளையருக்கு எதிரான இந்த புரட்சிக்கு அடித்தளமாக இருந்தது.
வேலூர் கோட்டையில் நடந்த சிப்பாய் புரட்சி வெள்ளையருக்கு எதிராக மிகச் சிறப்பாக திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வேலூர் கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தானின் மூத்த மகன் பத்தே ஹைதரும் மற்றவர்களும் அங்கிருந்த சிப்பாய்களிடம் வெள்ளையருக்கு எதிரான சுதந்திர உணர்ச்சியை கூர் தீட்டியதன் விளைவே இப்புரட்சி. தங்கள் படையில் இருந்த சிப்பாய்களின் நுண்ணிய உணர்வுகளுக்கும், அவர்கள் கடைபிடித்த பண்பாட்டின் அடிப்படையிலான பழக்கவழக்கங்களுக்கும் வெள்ளையர்கள் மதிப்பு தராதது மட்டுமின்றி அவைகளை கைவிடுமாறு உத்தரவிட்டது இப்புரட்சி வெடிக்கக் காரணமானது.
வேலூர் கோட்டையைக் கைப்பற்றி, திப்புவின் வாரிசுகளை முடிசூட்டி மீண்டும் நமது ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே அந்த கிளர்ச்சியின் நோக்கமாகும்.
1806ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு வேலூர் கோட்டைக்குள் வெள்ளைய அதிகாரிகளிடம் சிப்பாய்களும், தங்கியிருந்த குடியிருப்புகளின் மீது இந்திய சிப்பாய்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் வெள்ளைய அதிகாரிகளும் சிப்பாய்களுமாக 150க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
ஆனால், இத்தாக்குதல் செய்தி ஆற்காட்டில் இருந்த வெள்ளையர் படைக்கு எட்டியதும் அவர்கள் மறுநாள் காலை வேலூர் கோட்டைக்குள் நுழைய பெரும் ரத்தக்களறி ஏற்பட்டது. சிப்பாய்கள் புரட்சி நசுக்கப்பட்டது. 800க்கும் அதிகமான இந்திய சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். மீதமிருக்கும் சிப்பாய்கள் மனதில் இப்படிப்பட்ட எண்ணம் ஏற்படக் கூடாது என்பதற்காக பல சிப்பாய்களை பீரங்கியின் வாயில் கட்டி சுட்டுச் சிதறடித்தனர்.
வேலூர் சிப்பாய் புரட்சி நசுக்கப்பட்டதுடன் தென்னிந்தியாவில் வெள்ளைய ஆதிக்கத்திற்கு எதிரான தீ அணைந்தது.
11. மொகலாயரின் வீழ்ச்சி
மொகலாயர் ஆட்சி பேரரசர் அவுரங்கசீப் மரணத்துடன் 1701ஆம் ஆண்டு முடிந்ததை அடுத்து அவர்களை எதிர்த்து வந்த மராட்டிய அரசர்களும் மற்றவர்களும், பிரிட்டிஷாருடன் இணைந்து கொண்டு ஆங்காங்கு ஆட்சி அதிகாரப் பகிர்வு செய்து கொண்டனர். எனவே வெள்ளையர்களின் காலனி ஆதிக்கம் இந்தியா முழுவதும் தடையின்றி பரவியது.
12. பிரிட்டிஷ்-இந்திய அரசு வலிமை பெறுதல் (1800 - 1850)
தென்னாட்டில் திப்பு முதல் தீரன் சின்னமலை வரை வீழ்ந்ததை அடுத்து தங்களுடைய சாம்ராஜ்யத்தை எதிர்ப்பின்றி விரிவுபடுத்திக் கொண்ட பிரிட்டிஷ் - இந்திய அரசு, அதன்பிறகு முழு பலத்துடன் தனது நிர்வாகத்தை நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்திக் கொண்டது.
கேரளம் என்று அழைக்கப்படும் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து ஹைதராபாத் நிஜாம், ஆற்காடு நவாப், மராட்டியப் பேஷ்வாக்கள், புதுக்கோட்டை தொண்டமான் என்று ஆங்காங்கு இருந்த தங்களுக்கு ஆதரவான சமஸ்தானங்களுடன் அதிகாரப் பகிர்வு, வரி வருவாய் பங்கீடு செய்து கொண்டு தங்களுடைய ஆதிக்கத்தையும் முழுமையாக பிரிட்டிஷ் - இந்திய அரசு வலிமையாக நிலைப்படுத்திக் கொண்டது.
இந்த காலக்கட்டத்தில் தான் இந்தியாவை தாங்கள் நிரந்தரமாகக் கட்டியாளப்போகின்றோம் என்ற நினைப்பு உறுதியாகி அதன் அடிப்படையில் அடிப்படைக் கட்டுமானங்களை உருவாக்க பிரிட்டீஷார் திட்டமிட்டனர். சாலைகள், ரயில் பாதைகள் ஆகியன மட்டுமின்றி, விவசாய உற்பத்தியைப் பெருக்க (அப்பொழுதுதானே அதிக வரி வருவாய் கிட்டும்) பல அணைகளையும் கட்டினர். சில வரலாற்றாளர்கள் காட்டுவதைப் போல இந்தியாவின் மேம்பாட்டிற்காக இந்த மேம்பாடுகளை வெள்ளையர்கள் செய்யவில்லை. தங்களுடைய வசதிக்காகவும், வருவாயை பெருக்கிக் கொள்ளவுமே முன்னேற்றத்திட்டங்களை செயல்படுத்தினர். அந்த எண்ணத்தில் கட்டப்பட்டதுதான் முல்லைப் பெரியாறில் இருந்து மேட்டூர் அணை வரை என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது.