ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வதுண்டு. ஆடியில் விதை விதைத்தால், மழை நாட்களில் பயிர் தழைத்து, தை மாத அறுவடையில் நல்ல மகசூல் கொடுக்கும்.
ஆடி மாதத்தில் ஞாயிறு பகவானின் சூட்சும சக்திக் கதிர்கள் பூமியில் விழுவதால், ஜப தபங்கள், மந்திரங்கள், பூஜைகள் எது செய்தாலும் பன்மடங்கு பயனைத் தரும் என்று கூறப்படுகிறது.
ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் அமைகிறது. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.
ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக பின்பற்றப்படுகிறது.