டென்மார்க் கட்டுப்பாட்டில் இருந்த கிரீன்லாந்திற்கு சுயாட்சி அந்தஸ்து

ஞாயிறு, 21 ஜூன் 2009 (17:37 IST)
மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக டென்மார்க் கட்டுப்பாட்டில் இருந்த கிரீன்லாந்துக்கு, டென்மார்க் அரசு சுயாட்சி அந்தஸ்து அளித்துள்ளது.

வடதுருவ பகுதியில் டென்மார்க் நாட்டுக்கு அருகே உள்ளது கிரீன்லாந்து. இந்த நாடு, கடந்த 300 ஆண்டுகளாக டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த 1979இல் கிரீன்லாந்திற்கு கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்தை டென்மார்க் கொடுத்தது.

இதையடுத்து கடந்த நவம்பரில் நடந்த வாக்கெடுப்பில் கிரீன்லாந்து மக்கள் மாநில சுயாட்சி கேட்டு இருந்தார்கள். இதைத் தொடர்ந்து அந்நாட்டுக்கு சுயாட்சியை டென்மார்க் கொடுத்து உள்ளது.

இதனால் அந்நாட்டு இயற்கை வளங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பெரும்பகுதி கிரீன்லாந்து நாட்டுக்கு கிடைக்கும். இதேபோல் காவல்துறை, நீதிமன்றங்கள் உள்நாட்டு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

விரைவில் கிரீன்லாண்டிக் ஆட்சி மொழியாக மாற்றப்பட உள்ளது. எனினும் அயல்நாட்டு விவகாரம், ராணுவம் ஆகியவை மட்டும் டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்