இலங்கைத் தமிழருக்கு ரூ.1,000 கோடி நிதி: கருணாநிதி கோரிக்கை
புதன், 10 ஜூன் 2009 (11:57 IST)
இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வரின் இந்தக் கோரிக்கையை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் வலியுறுத்தினர்.
இலங்கைத் தமிழர்களுக்காக ரூ.500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கு முதலமைச்சர் கருணாநிதி சார்பில் நாடாளுமன்ற தி.மு.க குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோரை நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
மேலும் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி சார்பில் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
அப்போது பிரதமர் மன்மோகன்சிங், தமிழ்நாட்டின் மீதும் இலங்கைத் தமிழர்கள் மீதும் எனக்கு எப்போதும் தனி அக்கறை உண்டு என்றும் தாங்கள் தமிழ்நாட்டின் பிரச்சனைகளுக்காக எந்த நேரமும் என்னை அணுகலாம் என்றும் தி.மு.க உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
அதேபோல சோனியா காந்தி, ''இலங்கைத் தமிழர்களின் துயர் துடைக்க மத்திய அரசு மேலும் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதற்கு பிரதமரிடம் பரிந்துரை செய்வேன்'' என்று கூறினார்.