புதிய போட்டி நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில் முதன்மையானதாக இருக்கும் விஜய் டிவி ஒரு வார்த்தை ஒரு லட்சம் என்ற புதிய வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சொல் திறமைக்கும், வார்த்தைகளை கண்டுபிடிக்கும் திறமைக்கும் சவால் விடும் அறிவுசார்ந்த இந்த நிகழ்ச்சியில் வார்த்தைகளை சரியாக கண்டுபிடித்து வெற்றி பெறுபவர்கள் ஒரு லட்சம் ரூபாய் பரிசுப்பணம் வெல்லலாம்.
இந்த வார்த்தை விளையாட்டை இரண்டு அணிகள் விளையாடலாம். இரண்டு நபர்களைக் கொண்டது ஒரு அணி. முதல் வரும் சுற்றுக்களில் வார்த்தைகள் முற்றிலும் தமிழில் அமைந்திருக்கும். அந்தந்த அணியில் உள்ள ஒருவர், கொடுக்கப்படும் வார்த்தைக்கு மாற்று வார்த்தைகளை தமிழில் தெரிவிக்க வேண்டும். அந்த மாற்று வார்த்தைகளை வைத்து சரியான வார்த்தைகளை மற்றொருவர் கண்டுபிடிக்க வேண்டும்.
இப்படி இரண்டு அணிகளுக்கும் தலா ஐந்து முதல் பத்து வார்த்தைகள் வரை வழங்கப்படும். குறைந்த வினாடிகளுக்குள் அதிகப்படியான சரியான வார்த்தைகளை கண்டுபிடிக்கும் ஒரு அணி அடுத்த கட்ட விளையாட்டுச் சுற்றுக்குள் நுழையும்.
இதுவே ஒரு லட்சம் ரூபாயை வெல்லக்கூடிய சுற்றாகும். இதில் பத்தாயிரத்தில் தொடங்கி, இருபது ஆயிரம், ஐம்பதாயிரம், எழுபத்தைந்தாயிரம், ஒரு லட்சம் என்ற வரிசையில் பரிசுகள் காத்திருக்கும். ஒன்பது க்ளுக்களில் ஐந்து வார்த்தைகளை கண்டு பிடிப்பவர் பத்தாயிரம் வெல்லலாம். எட்டு க்ளூக்களில் ஐந்து வார்த்தைகளை கண்டுபிடிப்பவர் இருபதாயிரத்தை வெல்லலாம். ஏழு க்ளூக்களில் ஐந்து வார்த்தைகளை கண்டுபிடிப்பவர் ஐம்பதாயிரம் வெல்லலாம். இப்படி ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் வாய்ப்புகள் தொடரும்.
இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.