சென்னையில் வரும் பொங்கல் பண்டிகை முதல் அரசு கேபிள் டிவி தனது சேவையை துவக்க உள்ளது. இது தொடர்ந்து நிரந்தரமாக செயல்படும் என்று அதன் நிர்வாக இயக்குனர் உமா சங்கர் கூறினார்.
இது குறித்து அவர் பேசுகையில், அரசு கேபிள் டி.வி. ஒரு பொதுத்துறை நிறுவனமாக தொடர்ந்து நிரந்தரமாக இயங்கும் என்பது உறுதி.
ஒரு சில கட்டண சேனல்கள், அரசு கேபிள் டி.வி.க்கு தரமாட்டோம் என்று கூறியிருப்பதால், அதுதொடர்பான வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் உள்ளது. கட்டண சேனல்கள் இல்லாததால் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு சற்று கஷ்டம் உள்ளது. நியோ ஸ்போர்ட்ஸ் என்ற சேனல், அரசு கேபிள் டி.வி.யில் மட்டுமே உள்ளது.
நேரடி பேச்சு வார்த்தை அல்லது வேறு வழியாக கட்டண சேனல்கள் இன்னும் 3 மாதங்களுக்கு கிடைத்துவிடும்.
பைபர் தொழில்நுட்பத்தின் மூலம் பல கட்டுப்பாடுகளை எளிதாக அமல் செய்ய முடியும்.
எல்லாவற்றையும் `கன்டிசனல் ஆக்சஸ் சிஸ்டம்'-த்தின் (சி.ஏ.எஸ்.) கீழ் கொண்டு வரத் திட்டமிட்டு உள்ளோம். சந்தா செலுத்தாத இணைப்பை இங்கிருந்தே துண்டிக்கலாம். வீடியோ திருட்டு பயம் இல்லை. படம் மிகத் துல்லியமாகத் தெரியும். மேலும் பல தொழில்நுட்ப இணைப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த தொழில்நுட்பம் அடங்கிய 50 லட்சம் `செட் ஆப் பாக்ஸ்' தயாரிக்க முடிவு செய்துள்ளோம். அதையடுத்து மக்கள் கருத்தை அறிய இருக்கிறோம். இந்த பாக்சின் விலை ரூ.2,500 ஆயிரம் வரை இருக்கும். ரூ.2 ஆயிரத்துக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறோம். முதல்கட்டமாக ரூ.1,500 தந்தால் போதும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் 800 சேனல்கள் வரை பார்க்க முடியும். மேலும் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்.
தற்போதுள்ள மக்கள் உபயோகிக்கும் செட் ஆப் பாக்ஸ்களும் இந்த தொழில்நுட்பத்துக்குள் கொண்டு வரப்படும். ஆனால் அவற்றுக்கென்று தனி ஸ்மார்ட் காட்டு கொடுப்போம். அதன் பின்னரே அது வேலை செய்யும். சி.ஏ.எஸ். முறையின் கீழ் 10 வகையான செட் ஆப் பாக்ஸ்களை இயக்க முடியும். சென்னையில் பொங்கல் தினத்தன்று தொடங்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம். அதை அரசு அறிவிக்கும்.
சென்னையில் ஆரம்பகட்டத்தில் ரூ.100-க்கு 80 சேனல்களுடன் ஒளிபரப்பு தொடங்கும். அதில் தற்போது 28 கட்டண சேனல்கள் உள்ளன. மொத்த தொகை ரூ.2,500 செலுத்தி இணைப்பைப் பெறலாம். சென்னையில் சி.ஏ.எஸ். முறையோடு ஒளிபரப்பு தொடங்கும். மற்ற இடங்களில் டிஜிட்டல் முறையில் கொண்டு வந்துள்ளோம். போகப்போக 100 ரூபாயில் இருந்து கட்டணத்தைக் குறைக்க ஆலோசிக்கப்படும். கட்டணத்தை கொடுத்தால் அதற்கு ரசீது கொடுக்க ஆபரேட்டர்களை ஒழுங்கு செய்வோம். அதற்கென்று தனி `சர்வேயர்' போடப்படும்.
தமிழகம் முழுவதும் பைபர் போட 6 மாதங்கள் ஆகும். இதுவரை எங்களுக்கு அரசு ரூ.60 கோடி தந்துள்ளது. மேலும் ரூ.100 கோடி தேவைப்படும். தற்போது சன், சோனி, ஸ்டார் ஆகிய சேனல்கள், அரசு கேபிள் இணைப்பில் வரவில்லை. அதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. மற்ற சேனல்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளன.
சன் சேனல் கிடைப்பதில் சிக்கல் இல்லை என்றே நினைக்கிறேன். நானே தனிப்பட்ட முறையில் தயாநிதி மாறனை சந்தித்துப் பேசினேன். சேனலை தருவதாக சாதகமான பதிலை கூறி இருக்கிறார். தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்துகிறோம். அரசு கேபிள் டி.வி. பொதுத்துறை நிறுவனமாக இயங்கும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி தெளிவுபடுத்திவிட்டார் என்று கூறினார்.