சின்னத்திரை விருது வழங்கும் விழாவில் சிறந்த மெகா தொடருக்கான முதல் பரிசை 'ராடன்' நிறுவனத்தின் 'செல்வி' தொடர் பெற்றது. இதை ராதிகா சரத்குமார் பெற்றுக்கொண்டார்.
அவருக்கு ரூ.2 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறந்த மெகா தொடருக்கான 2ம் பரிசு ஏ.வி.எம்.மின் 'சொர்க்கம்' தொடருக்கு வழங்கப்பட்டது. படஅதிபர் ஏவி.எம்.சரவணன் விருதை பெற்றுக் கொண்டார்.
சிறந்த வாரத் தொடருக்கான விருது 'அல்லி ராஜ்யம்', ஆண்டின் சிறந்த சாதனையாளர் விருது 'கோலங்கள்' திருச்செல்வம், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் விருது ராணி சோமநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த கதாநாயகனுக்கான விருது 'மலர்கள்' தொடரில் நடித்த அபிஷேக்குக்கும், சிறந்த கதாநாயகி விருது 'கல்கி' தொடரில் நடித்த குஷ்புவுக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த குணச்சித்திர விருது 'ஆனந்தம்' டெல்லிகுமார், சிறந்த குணச்சித்திர நடிகை விருது 'சொர்க்கம்' தேவிப்பிரியா, சிறந்த வில்லன் நடிகர் விருது 'கோலங்கள்' அஜய், சிறந்த 'வில்லி' விருது 'ஆனந்தம்' பிருந்தா தாஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை 'மைடியர் பூதம்' மாஸ்டர் பரத் தட்டிசென்றார். சிறந்த தொழிற்நுட்பக் கலைஞர்களுக்கும் விருது வழஙகப்பட்டது.
கடந்த 2005ம் ஆண்டில் குறைந்த செலவில் வெளியான தரமான தமிழ்ப்படங்கள் பிரிவில் '6.2', 'ஏ.பி.சி.டி.', 'பவர் ஆப் உமன்', 'ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சி', 'இங்கிலீஸ்காரன்', 'காதல் எப்.எம்.','அலையடிக்குது', 'ரைட்டா தப்பா, உள்ளிட்ட 34 படங்களுக்கும், 2006ல் வெளியான 'பாசக்கிளிகள்', 'சுயேட்சை எம்.எல்.ஏ', 'இது காதல் வரும் பருவம்', 'டான் சேரா' உள்ளிட்ட 36 படங்களுக்கும் அரசு மானியம் வழங்கப்பட்டது.