அடுத்த நடனப் புயலுக்கான தேடல் - விஜய் டிவியில் ஆரம்பம்!
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (20:17 IST)
ஒருவரின் நடனத் திறமையை நிரூபிக்கும் வகையில், விஜய் டிவியில் வரும் 21 ஆம் தேதி முதல் துவங்கும் நிகழ்ச்சி, 'அமுல் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா'.
இந்த நிகழச்சியில் பங்கு பெறுவதற்கான நேர்முகத் தேர்வில், நடனத்தில் விருப்பமுள்ள, 16 முதல் 35 வயது நிரம்பிய ஆண் / பெண் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
முதற்கட்ட தேர்வு திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நடந்து முடிந்தது. இதில் நடன இயக்குனர்கள் ஸ்ரீதர், கெளதம் ஆகியோர் திருச்சி, கோவையில் நடுவர்களாகவும் ஸ்ரீதர், நடிகை தேஜாஸ்ரீ ஆகியோர் மதுரையில் நடுவர்களாகவும் பங்காற்றினர்.
500க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த நேர்முகத் தேர்வுகளில் பங்குபெற்றனர். இறுதியாக திருச்சியிலிருந்து 23 நபர்களும் கோவையிலிருந்து 27 நபர்களும் மதுரையிலிருந்து 20 நபர்களும் அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
Western, classical, folk என எந்த ஸ்டைலில் இவர்கள் சிறந்து விளங்கினாலும் அதில் நடனமாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை என்பது குறிப்பிடதக்கது.
சென்னை முதற்கட்ட தேர்வின் முதல் நாளில் 1,500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்குபெற்றனர். இதில் சுமார் 250க்கு மேற்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஸ்ரீதர், ஒரு சிறப்பு நடுவர் ஆகியோர் முன்பு நடனமாட உள்ளனர்.
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியை கலக்கப் போவது யாரு புகழ் ரம்யா தொகுத்து வழங்கவுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் திறமை வாய்ந்த பல நடுவர்கள் பங்கேற்கும் பலவகையான சுற்றுகளை சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
வரும் ஆகஸ்ட் 21, முதல் வியாழன், வெள்ளி இரவு 9 மணிக்கு 'அமுல் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி' விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.