ஆகஸ்ட் 8 இல் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா!
திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (15:55 IST)
சின்னத்திரை கலைஞர்களுக்கான விருதுகள், திரைப்பட மானியம் வழங்கும் விழா வரும் 8ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விருதுகளை முதலமைச்சர் கருணாநிதி வழங்குகிறார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " சிறந்த சின்னத்திரை தொடர்கள், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர்கள், நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் திட்டத்தை 2006ஆம் ஆண்டு தமிழக அரசு அறிமுகம் செய்தது.
இதன்படி, ராதிகா, குஷ்பு, திருச்செல்வம்,அபிஷேக் உட்பட 22 சின்னத்திரை கலைஞர்களுக்கான விருதுகளை முதலமைச்சர் கருணாநிதி வழங்குகிறார்.
இதனைத் தொடர்ந்து, 2005, 2006ஆம் ஆண்டுகளுக்கான குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த 70 திரைப்படங்களுக்கு மொத்தம் ரூ.4,90,00,000 மானியமும் முதலமைச்சர் கருணாநிதி வழங்குகிறார்.
இதற்கான விழா வரும் 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.