புதிய தொலைக்காட்சி : கருணாநிதி விளக்கம்!

ராஜ் தொலைக்காட்சி குழுமம் துவக்கவுள்ள கலைஞர் டி.வி. எனும் புதிய தொலைக்கட்சி ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்!

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புதிய தொலைக்காட்சி ஜூன் 3 ஆம் தேதி ஒளிபரப்பை தொடங்கும் என்ற தகவல் தவறானது என்றும், புதிய தொலைகாட்சி பற்றிய அறிவிப்பு ஜூன் 3 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறினார்.

ஒளிபரப்புத் துறையில் அனுபவம் பெற்றவர்கள் தங்களுக்கு உதவ முன்வந்திருப்பதாக தெரிவித்த முதலமைச்சர் கருணாநிதி, தொலைக்காட்சித் துறையில் சிறந்த நிபுணர்கள் இதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

புதிய தொலைகாட்சியை தி.மு.க. நிர்வகிக்காது என்பதை குறிப்பிட்ட அவர், ராஜ் டி.வி. குழுமம் புதிய தொலைக்காட்சியை நிர்வகிக்கும் என்றார். இதை கலைஞர் தொலைக்காட்சி என்று எல்லோரும் சொல்லுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த புதிய தொலைக்காட்சியில் தான் பங்கேற்கும் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி எதுவும் இடம் பெறாது என்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் கருணாநிதி, சில மாநிலங்களில் இதற்கான முயற்சி நடந்ததாகவும் தன்னையும் இதில் ஈடுபடுத்த சிலர் அணுகியதாகவும் தெரிவித்தார்.

தொலைக்காட்சி மூலம் ஆட்சி நடத்த இயலாது என்பது தன்னுடைய கருத்து என்றும் அவர் கூறினார். தி.மு.க தலைமை நிலையமான அறிவாலயத்தில் இருந்து சன் டி.வி.யை வெளியேறும்படி யாரும் சொல்லவில்லை என்றும், சன் டி.வி. நிர்வாகம் விரும்பும் வரை அறிவாலயத்தில் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்