குற்றாலத்தில் சாரல் மழை
செவ்வாய், 25 மே 2010 (13:02 IST)
கோடை விடுமுறையை பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாச் சென்று குதூகலத்துடன் கொண்டாடி வரும் மக்களுக்கு இனிய செய்தியாக குற்றாலத்தில் தற்போது சீசன் துவங்குவதற்கு அறிகுறியாக மனதை வருடும் தென்றல் காற்றும், லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது.
இன்னும் ஒரு வாரத்தில் குற்றாலத்தில் சீசன் துவங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலமாகும். இந்த ஆண்டு வரும் வாரம் ஜூன் மாதம் துவங்க உள்ள நிலையில் தற்போதே குற்றாலத்திலும் சீசன் துவங்குவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விட்டன.
சீசன் சமயத்தில் பகலில் மிதமான வெயிலுடன் அவ்வப்போது சாரல் மழை பொழியும். கேரளாவில் பெய்யும் தென்மேற்கு பருவ மழை குற்றாலத்தில் சாரலாக பொழியும். தமிழகத்தின் மற்றப் பகுதிகளில் வெயில் கொளுத்தும் சமயத்தில் குற்றாலத்தில் சீசன் துவங்குவதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வந்து சீசனை அனுபவிப்பார்கள்.
சீசன் துவங்குவதற்கு அறிகுறியாக அனல் காற்று மறைந்து தற்போது குற்றாலம், தென்காசி பகுதிகளில் இதமான தென்றல் காற்று வீசுகிறது. ஐந்தருவி, குற்றாலம் பகுதியில் நேற்று மதியம் வரை லேசான வெயில் காணப்பட்டது. மதியத்திற்குப் பிறகு மேகக் கூட்டங்கள் திரண்டு காணப்பட்டது. ஐந்தருவி பகுதியில் லேசான சாரலும் பெய்தது.
இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். இதேப் போன்று சாரல் மழை தொடரும்பட்சத்தில், இன்னும் ஒரு வாரத்தில் சீசன் முழுமையாக துவங்கிவிடும் என்றும், குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டும் என்றும் மக்கள் எதிர்பார்த்து மகிழ்ச்சியோடு காத்திருக்கின்றனர்.