சென்னை தீவுத்திடலில் அக்.1 முதல் பொருட்காட்சி துவக்கம்!
செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (17:58 IST)
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னைத் தீவுத்திடலில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை உணவு மற்றும் விளையாட்டுத் திருவிழா பொருட்காட்சி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் முதல் முறையாக உணவு மற்றும் விளையாட்டுத் திருவிழாவை அக்டோபர் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தீவுத்திடலில் நடத்த இருக்கிறது.
இந்தப் பொருட்காட்சி தொடங்க இருக்கின்ற முதலாம் நாளான அக்டோபர் 1ஆம் தேதி கட்டணம் ஏதுமின்றி இலவசமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்தக் கண்காட்சி மதியம் 3 மணியில் இருந்து இரவு 10 மணி வரை இயங்கும்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினுடைய சிறுவர் ரயில் குழந்தைகளை குதூகலப்படுத்தும்.
தமிழகத்தில் உணவுச் சுற்றுலாவை மேம்படுத்தும்பொருட்டு இந்தப் பொருட்காட்சி நடத்தப்படுகிறது. இந்தப் பொருட்காட்சியில் பல்வேறு உணவு வகைகள் கிடைக்கும். சைவ, அசைவ உணவுகள் தனித்தனியான அரங்கங்களில் கிடைக்கும். பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், ஆந்திரப்பிரதேசம் முதலிய மாநிலங்களின் உணவு வகைகளும் இங்கே கிடைக்கும்.
பெரியவர்களுக்கு நுழைவுக் கட்டணம் ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5. விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்திய ஓட்டல் மேலாண்மை நிறுவனம் மற்றும் இதர உணவுக் கல்வி நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டு, பல்வேறு உணவு வகைகளை தயாரிப்பது எப்படி என்று செயல் விளக்கம் தர இருக்கின்றனர். பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான உணவை எப்படி தயாரிக்கவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளலாம்.
இந்த உணவுத் திருவிழா உலகச் சுற்றுலாநாளைக் கொண்டாடுவதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.