சென்னை‌ப் பொருட்காட்சி துவ‌ங்கு‌கிறது

சென்னை பொருட்காட்சி புதன்‌கிழமை (24-ந் தேதி) தொடங்குகிறது. அரசு அரங்குகள், ‌கடைகள், விற்பனை அரங்குகள், ‌‌விளையா‌ட்டு அ‌ம்ச‌ங்க‌ள் என ‌‌தீவு‌த் ‌திட‌ல் களை க‌ட்ட‌ப் போ‌கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அண்ணாவின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 24-ந் தேதி முதல் 70 நாட்களுக்கு இந்த பொருட்காட்சி நடக்கிறது. பொருட்காட்சியில் 26 மாநில அரசுத்துறை நிறுவனங்கள், 12 அரசுத்துறை நிறுவனங்கள், 3 மத்திய அரசு நிறுவனங்கள் என மொத்தம் 42 அரசு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் 115 கடைகளும், 26 விற்பனை அரங்குகளும் தனியார் மூலம் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை திருமலை நாயக்கர் மஹால் வடிவமைப்பு பொருட்காட்சியின் முகப்பாக இந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற மக்கள் கிராமச் சூழ்நிலையை உணர்ந்து அனுபவிக்கும் வகையில் சிற்றூர் சுற்றுலா எனப்படும் சிறப்பு அரங்கு 25 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் கலைநிகழ்ச்சிகள் நடத்த மாமல்லபுரத்தின் கடற்கரை கோவில் அமைப்பும், அண்ணா திறந்தவெளி கலையரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரிசா, குஜராத், சிக்கிம், மிஜோரம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், அஸ்ஸாம், ஜார்க்கண்ட், மணிப்பூர், அருணாசல பிரதேசம், புதுச்சேரி மற்றும் நாகலாந்து மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் அம்மாநில மக்களின் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் இந்தாண்டு முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமர்நாத் பனி லிங்கம் போன்ற அமைப்பு ஆன்மீக மக்களை பரவசப்படுத்தும்.

மலையேற்றம், சறுக்கு விளையாட்டு, மதில் ஏற்றம் பஞ்ச் ரிங் போன்ற வீரசாகச விளையாட்டுகளும் இந்தியாவிலேயே முதன் முறையாக சூடான கா‌ற்‌றி‌ல் பற‌க்கு‌ம் பலூ‌‌ன், கு‌தி‌த்து ‌விளையாடு‌ம் மெ‌த்தை போ‌ன்றவையு‌ம் இட‌ம்பெ‌ற்று‌ள்ளன.

இதுமட்டுமல்லாமல் மீன் காட்சி, 40 வகையான கேளிக்கை விளையாட்டுகள் மற்றும் பல புதுமையான விளையாட்டுகளு‌ம் அமைக்கப்பட்டு வருகின்றன.

பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு சலுகை கட்டணமாக ரூ.5-ம், சிறுவர்களுக்கு ரூ.5-ம், பெரியவர்களுக்கு ரூ.10-ம் நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சி, அலுவலக நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையும் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையும் செயல்படும். நுழைவு சீட்டிற்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும். இ‌ந்த ஆ‌ண்டு 20 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது எ‌ன்று கூறு‌‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்