சென்னை அருங்காட்சியகத்தில் கண்ணை கவரும் வண்ண மீன்கள்!
Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:07 IST)
சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மீன் அருங்காட்சியகத்தில் பல்வேறு வகையான அரிய மீன் இனங்கள் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு கலர்களில், வித விதமான மீன்கள் கண்ணை கவர்கின்றன.
இந்த மீன்கள் குறித்து விஞ்ஞானி ஜே.டி.ஜோதிநாயகம் கூறுகையில், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள மீன்கள் அனைத்தும் சென்னை மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து புதிதாக கொண்டு வரப்பட்டவை. இந்திய கடல் பகுதியில் ஏராளமான கடல் உயிரினங்கள் கிடைக்கின்றன என்றார்.
பிரவுன், வெள்ளை என்று நிறத்தை மாற்றிக் கொள்ளும் கோழி மீன் பார்க்க சாதுவாகவும், முட்களில் விஷமும் கொண்ட தும்பி மீன், எதிரிகளை பார்த்தால் உருவத்தை பெரிதாக்கி பயமுறுத்தும் பலாசி மீன், கடல் தாமரையுடன் கொஞ்சி உறவாடும் ஒரே மீன் வகையான அனிமுனி மீன், பசுமீன், கிளிமீன், குரங்கு சுறா, கடல் பாம்பு, அரிய வகை கடல் நண்டு, அழிந்து வரும் கடல் குதிரை போன்ற பல்வேறு வகையான கடல் உயிரினங்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன என விஞ்ஞானி தெரிவித்தார்.
காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பொது மக்கள் இலவசமாக பார்க்கலாம் என்று விஞ்ஞானி ஜோதிநாயகம் கூறினார்.