இந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் 300க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் எப்போதும் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், கோட்டை மதில் சுவரையொட்டிய மேல் தளத்தில் பல திசைகளை நோக்கியவாறு பீரங்கிகள் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இப்போது அங்கு ஒரு பீரங்கி கூட இல்லை.
ஆனால் அந்த இடத்தில் இருந்து நாம் காணக்கூடிய காட்சி: தூரத்தில் விவேகானந்தர் பாறையும், திருவள்ளுவர் சிலையும், அதற்கு நேர் எதிர்த் (வட) திசையில் பல்லாயிரக்கணக்கான காற்றாலைகளும், அவற்றின் முடிவில் கூடங்குளம் அணு மின் நிலையமும், கோட்டையின் மேற்குப் பகுதியில் பசுமையான மலைகளும், கிழக்கே பரந்து விரிந்த கடல் பகுதியுமாகும்.