கி.பி. 1516ம் ஆண்டு வங்க கடலோரத்தில் மயிலாப்பூர் மேற்குப் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மாதா அருளிய அற்புதச் சுடர் வெளிச்சத்தால் உருவாகியது இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம். இது இறைவன் தாமே தேர்ந்து எடுத்துக் கொண்ட அற்புத இடமாகும்.
479 ஆண்டுகளுக்கு முன் இறைவனின் அன்னை மரியாள் தமிழக மக்களுக்கு செய்தருளிய முதல் வெளிப்படையான அற்புதம் இத்திருத்தலமேயாகும்.
பிரகாச மாதா ஆலய 400 வது ஆண்டு விழா 1916ம் ஆண்டு மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வாஸ்கோடகாமா, போர்ச்சுக்கல்லிலிருந்து கொச்சிக்கு புதிய கடல் மார்க்கம் கண்டுபிடித்து உலக சரித்திரத்தில் இடம் பெற்றவர்.
இதை அவர் கி.பி. 1498ல் கண்டறிந்தார். இது மேல் திசையிலிருந்து கீழ் திசைக்கு கடல்வழி புதிய மார்கமாகும். இதனால் வாணிபமும் நம் நாட்டில் பெருகலாயிற்று.
நற்செய்தி குருக்கள் :
இயேசு கிருஸ்துவின் நற்செய்தி சுவிசேஷத்தை தாங்கிய புனித பிரான்சிஸ் அசிசியாருடையை எட்டு குருக்களும், மாலுமிகளும் கி.பி. 1500 ஆம் ஆண்டு போர்ச்சுக்கல்-லிஸ்பனிலிருந்து புறப்பட்டு புதிய கடல் வழியே வந்து கேரளாவில் கொச்சியை வந்தடைந்தனர். சில காலம் அங்கு தங்கி வேதத்தை போதித்த இந்த குருக்களில் ஐவர் தமது கடல் பயணத்தை தொடர்ந்தனர். கன்னியாகுமரியை சுற்றிக் கொண்டு வங்க கடலுக்கு வந்தனர்.
அங்கு அவர்கள் பல நாட்கள் திசை சரிவர அறியாது அல்லல்பட்டனர். துயர் மிக்க வேளையில் துயர் துடைத்தது போல் கடற்கரையில் ஒரு பிரகாசச் சுடர் அவர்கள் கண்களை கவர்ந்தது.
சொல்லொண்ணா மகிழ்ச்சி அடைந்தனர். இந்தப் பெருஞ்சுடரை நோக்கிய வண்ணம் தமது படகை விரைவில் ஓட்டி கடற்கரையை அடைந்தனர். அவர்கள் தரை இறங்கிய இடம் பெதூமா என வழங்கப்பட்ட புனித தோமையாரின் சடலம் புதைக்கப்பட்ட புனித இடமாகும்.
அவர்கள் தரையில் இறங்கியதும் தாங்கள் கண்ட பிரகாசச் சுடர் தொடர்ந்து மேற்கு திசையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவு சென்று காட்டுப்பகுதியாக இருந்த இடத்தை அடைந்து மறைந்தது.
இவ்வற்புத சுடரில் வழி நடத்தப்பெற்று இங்கு வந்தடைந்த பின்னர் பிரான்சிஸ்கன் குருக்கள் அன்னை மரியாளின் மகிழ்ச்சிக்குரிய அற்புதத்தை கண்டுணர்ந்து, இங்கு ஒரு ஆலயம் எழுப்ப திட்டமிட்டு கி.பி. 1516ம் ஆண்டு கட்டி முடித்து இதனை லஸ் ஆலயம் என அழைத்தனர். காரணம் லஸ் என்றால் பிரகாசம், சுடர் எனப் போர்ச்சுக்கீசிய மொழியில் பொருள்படும்.
இந்த மகிமையான வரலாற்றுச் சிறப்பு மிக்க அற்புதம் நிகழ்ந்ததனால்தான் இந்தக் காட்டுப் பகுதிக்கே லஸ் என வழங்கப்பட்டு வருகிறது. காட்டுப் பகுதியாக இருந்தமையால் இன்றும் காட்டுக் கோயில் என அழைக்கப்படுகிறது.
அன்னையின் (மாதா) அரும்பெரும் செயலாக அற்புதத்தின் வழி தமிழகத்தில் மரியாளின் வெளிப்படையான முதல் அற்புத புதுமையின் ஆலயம் லஸ் ஆலயம் ஆகும்.
பல நூற்றாண்டுகளாக இவ்வாலயத்தில் அமையப் பெற்றிருக்கும் மரியன்னையின் அற்புத சுருபம் (மாதா சிலை) புனித தன்மையுடன் விளங்குகிறது. அற்புதக் காட்சி அளித்து அண்டி வருவோர் அனைவருக்கும் வாழ்வின் வழிகாட்டியாகவும் வாழ்வின் பாதையாகவும் இருந்து மாதா ஆசிர் வழங்குகிறார்கள். பிரகாச அன்னையின் அருளால் எண்ணற்றோர், தீராத வியாதிகளுக்கு நற்சுகத்தையும், ஞானத் தெளிவையும் மழலை செல்வமற்ற தாய்மார்கள் பிள்ளைப் பேற்றையும் பெற்று மகிழ்கிறார்கள்.