அவன் ஒரு கில்லர். கையில் துப்பாக்கி. அவனுக்கு ஐந்தடி முன்னால் ஒரு போலீஸ்காரர். திடீரென்று அறை தொலைபேசி ஒலிக்கத் தொடங்குகிறது. தொலைபேசி சற்றுத்தள்ளி இருவருக்கும் சமதூரத்தில் இருக்கிறது. ஒலிக்கும் தொலைபேசியிலிருந்து பார்வையை விலக்கி கில்லர் போலீஸ்காரரை பார்க்கிறான்.
இதற்கு அடுத்து வரும் காட்சி மூன்று விதமாக அமையலாம். ஒன்று, கில்லர் போலீஸ்காரரிடம் தொலைபேசியை எடுத்துப் பேசச் சொல்லலாம். இரண்டு, துப்பாக்கி முனையில் போலீஸ்காரரை நிறுத்தி, கில்லரே தொலைபேசியில் பேசலாம். அல்லது, தொலைபேசியை எடுக்காமலே விட்டுவிடலாம்.
கோய்ன் சகோதரர்களின் நோ கண்ட்ரி ஃபார் ஓல்டு மென் திரைப்படத்தில் வரும் கில்லர் நான்காவதாக ஒரு முடிவை எடுக்கிறான்.
webdunia photo
FILE
எண்பதாவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்தப் படம், சிறந்த இயக்குனர், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என நான்கு விருதுகளை நோ கண்ட்ரி ஃபார் ஓட்டு மென் கைப்பற்றியது. கார்மேக் மெக்கார்த்தி இதே பெயரில் எழுதிய நாவலையே கோய்ன் சகோதரர்கள் படமாக்கியிருந்தனர்.
1980-ல் மேற்கு டெக்சாஸின் புழுதி பறக்கும் வறண்ட பாலைவனப் பகுதியில் நடக்கும் கதையிது. போதைப் பொருள் கடத்தலில் ஏற்பட்ட மோதல், கொலைகள், போலீஸ் விசாரணை, பணம் மற்றும் பணத்துக்காக தொடர்ந்து வரும் கொலையாளி. கேட்பதற்கு வழக்கமான ஹாலிவுட் திரைப்படமாகத் தோன்றும். ஆனால் இது காவியம்.
டோனி ஸ்காட்டின் மென் ஆன் ஃபயர் படத்தில், சி.ஐ.ஏ.யின் ட்ரெயிண்ட் கில்லரான டென்சில் வாஷிங்டன் தனது எதிரிகளை ஒவ்வொருவராக அழித்துக்கொண்டே வருவார். அதனை டென்சிலின் நண்பர் போலீஸ் அதிகாரியிடம் இப்படி வர்ணிப்பார்; டென்னசிலின் கலை, மரணம்! அவர் தனது கலையின் மாஸ்டர் பீஸை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்!
நோ கண்ட்ரி ஃபார் ஓட்டு மென் படமும் ஒரு மாஸ்டர் பீஸ். சரியாகச் சொன்னால், ஆர்ட் ஆஃப் மர்டர். மரணத்தின் கலை!
ராம்பிங் ஷாட்! பாஸ்ட் கட்டிங் போன்ற கொத்து பரோட்டத்தனங்கள் கோய்ன் சகோதரர்களின் படத்தில் இல்லை. ஒவ்வொரு கொலையும் நிதானமாக, முழுமையாக அதற்கேயுரிய அழகியலுடன் நடக்கிறது. பார்வையாளன் படத்தின் ஓட்டத்தில் கொலையை பார்க்கும் நிலையிலிருந்து மெல்ல கொலையில் பங்குகொள்ளும் ஒருவனாக மாறுகிறான்.
ஆஸ்கர் விருது வழங்கப்பட்டதற்கு மறுநாள், சைக்கோ கில்லர் திரைப்படங்கள் ஆஸ்கர் விருதில் ஆதிக்கம் செலுத்தியதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். அவர்களை அப்படி எண்ண வைத்த இன்னொரு படம், டாக்சி டு தி டார்க் சைட்.
22 வயதான ஆப்கான் டாக்சி டிரைவர், ஆப்கானில் உள்ள அமெரிக்கப் படைகளால் சித்ரவதைக்குள்ளாகி மரணமடைந்தார். பல நாட்கள் சிறையினுள் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டு அந்த டாக்சி டிரைவர் பூட்ஸ் காலால் மிதிக்கப்பட்டார்.
webdunia photo
FILE
அவர் நிரபராதி என்று நிரூபணமான பின்பும் சித்ரவதை தொடர்ந்தது. ஆப்கானில் அமைதியை நிலைநாட்டச் சென்ற அமெரிக்க வீரர்களின் சித்ரவதை அந்த அப்பாவி இறந்த பிறகே முடிவுக்கு வந்தது.
இந்தப் படத்தை கொல்லப்பட்ட அந்த ஆப்கான் இளைஞனுக்கும், தனது தந்தைக்கும் அர்ப்பணித்தார் அலெக்ஸ் கிப்னி. துரதிர்ஷ்டவசமாக இருவருமே உயிருடன் இல்லை.
அமெரிக்காவின் இதுபோன்ற 'சைடு எபெஃக்ட்'டை கமர்ஷியலாகச் சொன்ன படம் தி பார்ன் அல்டிமேட்டம். பார்ன் சீரிஸில் வந்த பார்ன் ஐடெண்டிட்டி, பார்ன் சூப்பர்மஸிக்கு பிறகு மூன்றாவதாக வெளிவந்த படம்.
அமெரிக்காவுக்கு நிறைய எதிரிகள். அவர்களை அழிக்க அரசு திட்டம் ஒன்றை வகுக்கிறது. ட்ரெட் ஸ்டோன் அதன் பெயர். சாதாரண வீரர்களை கட்டளைக்கு கீழ்ப்படியும் ஹியூமன் வெப்பனாக மாற்றி, எதிரிகளை அழிப்பது திட்டத்தின் நோக்கம். சொந்த நாட்டுப் பணத்தை அதிகாரிகளே கையாடல் செய்வது, அரசியல் படுகொலைகள் என நீளும் படத்தில், மனித ஆயுதமாக தயார் செய்யப்பட்ட கதாநயகன் தான் யார், தான் செய்த கொலைகளுக்கு யார் காரணம் என்ற உண்மையைத் தேடி அலைகிறான்.
நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தி பார்ன் அல்டிமேட்டம், மூன்று பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த எடிட்டிங், சவுண்ட் மிக்ஸிங், சவுண்ட் எடிட்டிங் என்ற அந்த மூன்று பிரிவுகளிலும் இப்படம் விருதினை வென்று சாதனைப் படைத்தது.
சவுண்ட் மிக்ஸிங் பிரிவில் பார்ன் அல்டிமேட்டத்துடன் போட்டிப் போட்ட இன்னொரு படம் ஸ்பீர்பெர்க் தயாரித்த ட்ரான் பார்மர்ஸ். இதற்கு சவுண்ட் மிக்ஸிங் செய்த கெவின் ஓ கர்னலுக்கு விருது கொடுத்திருக்கலாம். ஆனால், கொடுக்கவில்லை. விருதை தவறவிட்டதன் மூலம் சாதனை ஒன்றை புரிந்திருக்கிறார் கெவின்.
ஆஸ்கர் விருது வரலாற்றில் 19 முறை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு ஒரு முறைகூட விருது பெறாத பெருமை கெவினுக்கு கிடைத்திருக்கிறது. வேதனையின் சாதனை!
சிறந்த துணை நடிகருக்கான விருது பெற்றவர், நோ கண்ட்ரி ஃபார் ஓல்டு மென் படத்தில் கில்லராக வரும் ஜாவியர் பர்டெம். கொழு கொழு முகம், நீண்ட சிகை. கையில் துப்பாக்கியுடன் ஜாவியர் அமர்ந்திருக்கிறார். எதிரே போலீஸ்காரர். திடீரென்று டெலி·போன் ஒலிக்கத் தொடங்குகிறது. ஜாவியர் டெலிஃபோனை பார்க்கிறார். பிறகு போலீஸ்காரரை பார்க்கிறார். இந்த சூழலை கையாள ஜாவியர் முன் மூன்று வழிகள் இருக்கின்றன.
ஜாவியர் மூன்றையும் நிராகரித்து, நான்காவதாக துப்பாக்கியின் விசையை இழுக்கிறார். பிறகு நிதானமாக தொலைபேசியை அருகில் எடுத்து பேசுகிறார். போலீஸ்காரரின் உடம்பிலிருந்து பெருகிய ரத்தம் ஜாவியரின் ஷூவை நோக்கி வருகிறது. வீடு பெருக்கும் வேலைக்காரிக்கு கால்களை உயர்த்துவதுபோல், இரு கால்களையும் தூக்கி சோபால் வைத்துவிட்டு பேச்சை தொடர்கிறார் ஜாவியர். அவரது முகம் நிர்ச்சலனமாக இருக்கிறது, எதுவுமே நடக்காத மாதிரி எதையுமே பார்க்காத மாதிரி, நடந்த எதற்குமே தனக்கு சம்பந்தமில்லாத மாதிரி!
இந்த அமைதி, நிதானம் நம்மை பார்வையாளன் என்ற நிலையிலிருந்து கொலையில் பங்கு பெறும் ஒருவராக மாற்றுகிறது. இந்த அமைதியின் தூரிகை கொண்டே கோய்ன் சகோதரர்கள் தங்கள், மரணத்தின் மாஸ்டர் பீஸை உருவாக்கியிருக்கிறார்கள்.