வியாழன், 6 மார்ச் 2008 (20:09 IST)
ஒரு திரைப்படத்தின் முற்றுப் பெறாத அம்சங்களால் பார்வையாளன் தனது பங்களிப்பை செலுத்தும் போதே திரைப்படமானது முழுமை பெறுகிறது என்கிறார் இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமி. ஈரானிய திரைப்படங்கள் உலக அளவில் அங்கீகாரம் பெறுவதற்கு காரணமாக இருந்தவர்களில் அப்பாஸ் கிராஸ்தமி முக்கியமானவர். 1940ல் டெஹ்ரானில் பிறந்த இவரது படங்களை, வாழ்வின் மெய்மையை கண்டடையும் பயணம் என்று எளிமையாக வகைப்படுத்தலாம்.
அப்பாஸ் கிராஸ்தமிக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் Palm d'Or விருதை பெற்றுத் தந்த படம் டேஸ்ட் ஆஃப் செர்ரி. இதில் வரும் நடுத்தர வயது மனிதர் காரில் பயணம் செய்கிறார். டெஹ்ரானின் சந்தடி மிகுந்த சாலைகளில் அவரது வாகனம் தயங்கித் தயங்கி செல்கிறது. தெருவோரம் நிற்கும் மனிதர்கள் காரை நெருங்கி வந்து, வேலைக்கு ஆட்கள் தேவையா என கேட்கிறார்கள். அவர்கள் நிரந்தர வேலை எதுவும் இல்லாதவர்கள். தினசரி கூலி வேலைகளுக்காக காத்திருக்கிறார்கள்.
அப்பாஸ் கிராஸ்தமி தனது திரைப்படங்களில் எதையும் வெளிப்படுத்துவது இல்லை, எதையும் சொல்வதும் இல்லை என்றொரு மேலோட்டமான குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. ஒரு வகையில் இந்தக் குற்றச்சாட்டு உண்மை. கிராஸ்தமியின் படங்கள் எதையும் முதன்மைப்படுத்துவதோ, இது சரி இது தவறு என வகைப்படுத்துவதோ கிடையாது.
ஒன்றை மட்டும் முதன்மைப்படுத்துவதும், சரி தவறு என நிர்ணயிப்பதும் கூட வன்முறையின் ஒரு பகுதிதான் என்கிறது போஸ்ட் மார்டனிஸம். போஸ்ட் மார்டனிஸம் கூறும் இந்த வன்முறை முழுமையாக களையப்பட்டவை கிராஸ்தமியின் படங்கள். இதன் பொருள் அவர் எதையும் தனது படங்களில் வெளிப்படுத்தவில்லை என்பதல்ல. தனது படங்கள் எதை சொல்ல வருகின்றன என்பதை தீர்மானிக்கும் உரிமையை அவர் பார்வையாளனுக்கே தந்து விடுகிறார்.
டேஸ்ட் ஆஃப் செர்ரியில் வரும் நடுத்தர வயது மனிதர் டெஹக்ரானுக்கு வெளியே வறண்ட, புழுதி பறக்கும் மலைப் பாதையில் தனது காரை ஓட்டிக் செல்கிறார். அவரது தேவையெல்லாம், அவருக்கு உதவி செய்ய ஒரு நம்பகமான மனிதன் வேண்டும். மலைப்பாங்கான பகுதியில் அவர் ஒரு குழி தோண்டி வைத்திருக்கிறார். தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு அன்றிரவு அந்தக் குழியில் அவர் படுக்க இருக்கிறார். அவருக்கு செய்ய வேண்டியதெல்லாம், மறுநாள் அந்த குழி அருகே வந்து அவர் பெயரை இருமுறை கூறி எழுப்ப வேண்டும். அவர் எழும்பவில்லை என்றால் அவர் மீது மண்ணைப் போட்டு மூடி விட வேண்டும். அதற்கு அவர் பெருந்தொகை தரத் தயாராக இருக்கிறார்.
அவர் உதவி கேட்கும் ராணுவத்தில் பணிபுரியும் சிறுவன், செமினாருக்காக ஆஃப்கானிஸ்தானிலிருந்து வந்திருக்கும் இளைஞன் என எல்லோருமே பணத்தேவை மிகுந்தவர்கள். ஆனால், யாரும் அவரது தற்கொலை முடிவுக்கு உதவுவதாக இல்லை. ராணுவத்தில் பணிபுரிபவன் நடுத்தர வயது மனிதனின் கோரிக்கைகையைக் கேட்டு பயந்து ஓடுகிறான். செமினார் இளைஞன் குரானை மேற்கோள் காட்டி தற்கொலை தவறு, எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு என வாதிடுகிறான். அவரது கோரிக்கைக்கு ஒத்துக்கொள்ளும் பேராசிரியரும், நாளை நீ நிச்சயம் உயிருடன் இருப்பாய் என கூறிச் செல்கிறார்.
பின்னணி இசை இல்லாமல் ஏறக்குறைய ஒரு டாக்குமெண்டரியைப் போல எடுக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சிகள் மற்றும் உரையாடல்களின் வழியாக கிராஸ்தமி வரைந்து காட்டும் சித்திரம் அரூபமானது.
ராணுவச் சிறுவன் குர்திஸ்தானை சேர்ந்தவன். அங்கு போர் என்பதும் கொலை என்பதும் சகஜம். சிறுவனும் சிறிது நாளில் தனது தொழில் நிமித்தம் தனக்கு அறிமுகமில்லாத பலரை கொலை செய்யப் போகிறான். செமினார் இளைஞன் ஆஃப்கானிஸ்தான் போர் காரணமாக அங்கு படிக்க இயலாமல் ஈரான் வந்தவன். செலவுகளுக்காக விடுமுறைகளில் வேலை பார்ப்பவன்.
இவர்கள் இருவருக்குமே போர், கொலைகள் என்பவை வாழ்வோடு நெடுக்கமானவை. இருவருமே போர் மிகுந்த சூழலில் இருந்து வந்தவர்கள். பணத் தேவை மிகுந்தவர்கள். இருந்தும் ஒரு மனிதனின் தற்கொலைக்கு உதவியாக இருப்பதற்கே அவர்களின் மனம் ஒப்பவில்லை. பணம் கிடைக்கும் என்ற நிலையிலும் அவர்கள் அந்த செயலுக்கு துணை போகவில்லை. இதுதான் போர் மிகுந்த சூழலில் இருக்கும் மனிதர்களின் இயல்பு என்றால், அவர்களை போர் செய்ய, சக மனிதர்களை படுகொலை செய்ய தூண்டுவது எது? அல்லது யார்?
நடுத்தர வயது மனிதனின் கோரிக்கைக்கு ஒத்துக் கொள்ளும் பேராசிரியர், தனது உரையாடலின் போது, தான் தற்கொலைக்கு முயன்றதை விவரிக்கிறார். தற்கொலை எண்ணத்துடன் மல்பரி தோட்டத்துக்கு கயிறுடன் வருகிறார் பேராசிரியர். மல்பரி மரத்தில் ஏறி சரியான கிளையை தேர்வு செய்யும்போது மல்பரி பழம் (Cherry) ஒன்று அவர் கையில் பட்டு நசுங்குகிறது. அதை சுவைத்துப் பார்க்கிறார். செர்ரியின் சுவை நாக்கில் ஒட்டிக் கொள்கிறது. மேலுமொரு செர்ரியைப் பறித்து சுவைக்கிறார். தொலைவில் சூரியன் செந்நிறத்தில் உதிக்கிறான். குழந்தைகள் மல்பரி தோட்டத்துக்கு வருகிறார்கள். பேராசிரியரின் மனதில் ஓர் எண்ணம்; 'ஆஹா... வாழ்க்கை தான் எத்தனை அற்புதமானது!’
பேராசிரியர் தற்கொலை செய்து கொள்ள விரும்பும் மனிதனிடம் கேட்கிறார், ''உனக்கு சூரியன் உதிப்பதை, இயற்கையின் அழகை ரசிப்பதில் விருப்பம் இல்லையா?’’ தொடரும் பேராசிரியரின் உரையாடல் வாழ்வின் ஆதார சுவை குறித்த அதிர்வலையை பார்வையாளர்களிடம் எழுப்புகிறது.
கிராஸ்தமியின் பிற படங்களைப் போலவே டேஸ்ட் ஆஃப் செர்ரியிலும் திட்டவட்டமான கதை என்று எதுவும் கிடையாது. ஆனால், அது தரும் அனுபவம், பேராசிரியருக்கு வாய்த்த, செர்ரியின் நாக்கில் தங்கி அந்த சுவைபோல மகத்தானது. அதனூடாக கிராஸ்தமி வரையும் அரூபமான சித்திரமும் அது உருவாக்கும் அதிர்வலையும் அழுத்தமானது; பிரமாண்டமானது!