நம்ம தமிழ் ரசிகர்கள் சொக்கத்தங்கம். ஒசாமா பின்லேடனும், ஒபாமாவும் ஒண்ணா வேட்டைக்குப் போனாங்கன்னு படம் எடுத்தாக்கூட ரசிச்சுப் பார்ப்பாங்க. அவங்களைப் பொறுத்தவரை லாஜிக்கெல்லாம் மேட்டரே இல்லை, படம் சுவாரஸியமா இருக்கா?
சகுனியில் முப்பது வயசு கமலக்கண்ணன் மேலும் மூணு வயசு முடியறதுக்குள் ரவுடி பெண்ணை மேயராக்குகிறார், எதிர்க்கட்சி தலைவரை முதல்வராக்குகிறார். சாதா சாமியாரை ஹைடெக்காக்குகிறார். லாஜிக்குக்கு பாடை கட்டிவிட்டே கதையை எழுதியிருக்கிறார்கள். மேட்டர் அதுவல்ல, சுவாரஸியப்படுத்தியிருக்கிறார்களா?
ஊருக்கு சோறு போட்டு ஒட்டாண்டியான குடும்பம் கார்த்தியுடையது. மிஞ்சுகிற ஒரே சொத்தான பாரம்பரிய வீட்டையும் சப் வேக்காக இடிக்க வேண்டும் என்கிறது அரசு. வீட்டை மீட்க சென்னை வருகிறார் கார்த்தி. முதல்வராக இருக்கும் பிரகாஷ்ராஜ் இவரை உதாசீனப்படுத்த... மேலே சொன்ன மேயர், முதலமைச்சர் அதிசயங்களையெல்லாம் தனது மொக்கை ஐடியாக்களால் சாத்தியப்படுத்துகிறார்.
கொஞ்சம் தூள், கொஞ்சம் கோ, சந்தானம் கார்த்தியை பணக்கார ஆள் என்று நினைத்து செலவு செய்யும் இடத்தில் மலையாளப் படம் கிலுக்கம் என பல படங்களை சகுனியார் நினைவுபடுத்துகிறார். ஹே... வென்று வாயை திறந்து வெகுளியாக சிரிக்கும் கார்த்தியின் ஸ்கிரின் பிரசன்ஸ் படத்தின் முக்கிய பலம். அதற்காக எத்தனை படத்தில் இப்படி சிரிப்பார் என்றுதான் தெரியவில்லை. ப்ரணீத்தா பாடல் காட்சியில் குட்டை பாவாடையில் மனதை ஷேக் செய்கிறார். அத்துடன் அவரது வேலை முடிகிறது.
சந்தானமும், கார்த்தியும் ஆரம்பத்தில் ரஜினி, கமல் என்று பரஸ்பரம் அழைத்து கலாயக்கும் காட்சிகள் சுவாரஸியம். அதுவே போகப் போக கஷாயம் மாதிரியாகிவிடுகிறது. வீட்டை மீட்க வந்த கார்த்தி இட்லிகடை ராதிகாவை கவுன்சிலராக்கி பிறகு மேயராக்குகிறார். செஞ்சோற்று கடன் மறந்த முதல்வர் பிரகாஷ்ராஜ் பதவியிலிருந்து தூக்கி எதிர்கட்சி கோட்டா சீனிவாசராவை முதல்வராக்குகிறார்.
வீட்டை மீட்க வந்த கார்த்தி தமிழ்நாட்டை ஏன் மாத்தி அமைக்கிறார் என்பதற்கு எந்த காரணமும் இல்லை. நடுநடுவே நல்லாட்சி தரணும் என்று சொல்ல வைத்து இந்த கேள்வியை பூசி மொழுகுகிறார்கள்.
சகுனி என்று பெயர் வைத்து காட்சிகளை புத்திசாலித்தனமாக கோர்க்காமல் அரத பழசு ஐடியாக்களால் நிறைத்திருப்பதுதான் முக்கியமான பலவீனம். இதனால் பிரகாஷ்ராஜ், நாசர், ராதிகா, கோட்டா சீனிவாசராவ் என்று ஒரு பெரிய டீமே வீணடிக்கப்பட்டிருக்கிறது. கிரண் கேரக்டர் சர்ப்பரைஸ். கிளைமாக்ஸ் டுவிஸ்டை இவரை வைத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள். ரசிக்கவில்லை. சந்தானம்தான் படத்தை முடிந்த மட்டும் முட்டுக் கொடுக்கிறார். ஆனால் அதுவும் லிமிடெட் மீல்ஸ்தான். பேட்டும், பாலும் இருந்தால்தான் சச்சினாலேயே சிக்ஸர் அடிக்க முடியும். சிச்சுவேசன் சரியில்லாமல் சந்தானம் மட்டும் எப்படி சிரிக்க வைப்பார்.
படத்தின் ப்ளஸ் என்று பார்த்தால் கார்த்தி, சந்தானத்தின் அறிமுக காமெடி, மொபைல் கோர்ட் கிச்சுகிச்சு காட்சி என்று யோசித்து ஒன்றிரண்டை சொல்லலாம். ஜி.வி.பிரகாஷின் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே. அதேபோல் முத்தையாவின் ஒளிப்பதிவு.
கார்த்தி, ஜி.வி.பிரகாஷ், சந்தானம், மெகா பட்ஜெட் என்று ஹைடெக் கட்டுமானப் பொருட்கள் இருந்தும் இயக்குனர் ஷங்கர் தயாள் கட்டியிருப்பது என்னவோ ஒழுகிற ஓலைக் குடிசை.