காதலை சொல்கிறவர்களுக்கு மத்தியில் காதலால் ஏற்படும் சேதாரங்களை சொல்லியிருக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி. பலரும் யோசிக்காத திக்கில் ஆச்சரியமும், ஆவேசமுமாக இழுத்துச் செல்கிறது படம்.
நண்பனின் நண்பன் நமக்கும் நண்பன். அந்த நட்புணர்வில் சசிகுமாரின் நண்பர் ரங்காவின் காதலை சேர்த்து வைக்க சசிகுமாருடன் கிளம்புகிறார்கள் அவரது நண்பர்களான விஜய்யும், பரணியும். போன இடத்தில் காரியம் கைகூடினாலும் சில இழப்புகளும் ஏற்படுகிறது அவர்களுக்கு. சசிகுமாருக்கு அவர் காதலித்த மாமன் மகள் கிடைக்காமல் போகிறார். விஜய்க்கு ஒரு கால் ஊனமாகிறது. பரணியின் காது செவிடாகிறது.
webdunia photo
WD
இந்த இழப்புகளுக்கு அர்த்தம் கொடுக்க வேண்டிய ரங்காவும் அவரது காதலியும் சண்டை போட்டு தனித் தனியே பிரிகின்றனர். தங்களது தியாகம் வீணான நிலையில் நண்பர்கள் எடுக்கும் அதிரடி முடிவு நம்மை அதிர வைக்கிறது.
போதையும், ஜாலியுமாக திரியும் சசிகுமார் அண்டு கோ-வின் அறிமுகம் இது வழக்கமான சினிமாதானோ என்று நினைக்க வைக்கிறது. ஆனால், ரங்கா பிரேமுக்குள் வந்ததும் திரைக்கதையில் ராக்கெட் வேகம். முக்கியமாக ரங்காவின் காதலியை கடத்தும் எபிசோட். யதார்த்தமான காட்சியிலேயே இப்படி பதற வைக்க முடியுமா? சபாஷ் சமுத்திரக்கனி.
மாமன் மகள் அனன்யாவை திருமணம் செய்ய அரசு வேலை தேடுகிறார் சசிகுமார். இவர்களின் காதல் கிராமத்து ஹைக்கூ. நண்பன் தனது தங்கையை காதலிப்பது தெரிந்தும், தெரியாதது போல் நடிக்கும் சசிகுமார் கிடைக்கிற கேப்பிலெல்லாம் சிக்சர் விளாசுகிறார். அவர்கள் காதல் கைகூடாமல் போகும் போது நமக்கும் வலிக்கிறது.
webdunia photo
WD
மகனுக்கு காதலிக்க ஐடியா தரும் அப்பா, பரோட்டா மாஸ்டர் கஞ்சா கருப்பு, பார்க்கும் போதெல்லாம் அப்பாயின்மெண்ட் ஆர்டர் கேட்கும் மாமனார் என ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் உண்டு தனித்தன்மை. அனன்யாவுக்கு அழகான முகம். அதை அஷ்டகோணலாக்கும் போது அழகு மேலும் கூடுகிறது. சசிகுமாரின் தங்கையாக வரும் அபிநயா நம்பிக்கைக்குரிய அறிமுகம்.
வழக்கமான வெள்ளந்தி கிராமத்தை காட்டாமல் நாகரிகம் நுழைந்த கிராமத்தை காட்டியிருக்கிறார் சமுத்திரக்கனி. நாமக்கல் முன்னாள் எம்.பி. பாத்திர படைப்பில் மட்டும் சிறிது தொய்வு. கதைக்கு ஏற்ப கேமராவை சுழலவிட்டிருக்கிறார் கதிர். கலர் காம்பினேஷன் கைத்தட்ட வைக்கிறது.
படத்தின் டெம்போவை அதிகரிக்கிறது சுந்தர் சி. பாபுவின் இசை. குறிப்பாக ஆக்சன் காட்சியில் வரும் அந்த சம்போ சிவசம்போ பாடல்.
யதார்த்தமான கதைக்களத்தில் இயல்பான மனிதர்களை நடிக்க வைத்து நாடோடிகள் மூலம் தமிழ் சினிமாவுக்கு வளம் சேர்த்திருக்கிறார் சமுத்திரக்கனி. மனம் கனிந்து பராட்டலாம்.