திருவண்ணாமலை

நல்ல சினிமாவுக்காக மெனக்கெடும் இளைஞர்கள் ஒருபுறம். எடுத்தப் படத்தையே அரைத்துக் கொண்டிருக்கும் வேறு சிலர். இயக்குனர் பேரரசு எந்த ரகம் என்பதை திருவண்ணாமலை தெ‌ள்ளத் தெ‌ளிவாக‌ப் பு‌ரிய வைக்கிறது.

webdunia photoWD
கும்பகோணத்தில் கேபிள் டிவி நடத்திவரும் அர்ஜுனுக்கும், லோக்கல் எம்.எல்.ஏ. சாய்குமாருக்கும் தீராப் பகை. இருவரும் அடிக்கடி முட்டிக் கொள்கிறார்கள். மகன் இப்படி சதாநேரமும் அடிதடி என அலைகிறானே என்று அவரை சாந்தப்படுத்த திருவண்ணாமலை கோவிலுக்கு அழைத்து வருகிறார், அர்ஜுனின் அம்மா. அங்கு சாமியாராக அர்ஜுனுக்கு அகிம்சை உபதேசம் அளிப்பதும் வேறொரு அர்ஜுன்தான்.

என்னுடைய இடத்தில் இருந்தால் நீயும் அடிதடியில்தான் இறங்குவாய் என்று கேபிள் டிவி அர்ஜுன் சொல்வதை பொய்யாக்க, கும்பகோணத்துக்கு வண்டியேறுகிறார், சாமியார் அர்ஜுன். இறுதியில் சாமியாரால் அடிதடி இல்லாமல் சாய்குமாரை சாய்க்க முடிந்ததா என்பதை பதினாலு ‌‌ீலை பாழாக்கி சொல்லி முடிக்கிறார்கள்.

எந்த ஒரு சுவாரஸியமும் இல்லாமல் ஒரு படத்தை எடுக்க முடியும் என்பதற்கு திருவண்ணாமலை சிறந்த எடுத்துக்காட்டு. நூறு பேரை அடிக்கும் ஹீரோ, மற்ற எந்த வேலையும் பார்க்காமல் ஹீரோவை அழிக்க சதா திட்டம்போடும் வில்லன், காரணமே இல்லாமல் ஹீரோவை நாய்க் குட்டியாக சுற்றிவரும் ஹீரோயின். அட, காட்சிகளாவது புதுசா என்றால், அனைத்திலும் அறுபது வருட புராதனத்தின் தூசி.

குத்துப் பாடல்களிலும், பன்ச் டயலாக்குகளிலும் கவனம் செலுத்துவதை தவிர்த்து கொஞ்சம் வெளி உலகத்தை பேரரசு பார்ப்பது நல்லது.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் (இது ஏமாந்த ரசிகர்களுக்கு).