பொம்மலாட்டம் - விமர்சனம்

webdunia photoWD
பாரதிராஜாவின் பார்வை உலக அளவில் பரந்து வருவதற்கான அனைத்து விடயங்களையும் கொண்டுள்ளது பொம்மலாட்டம். படத்தின் ‌‌ஜீவ நாடியான கிளைமாக்ஸை இன்னும் அழுத்தமாக, படத்தின் பிரதான விஷயமாக காட்டியிருந்தால், பொம்மலாட்டத்தின் மதிப்பே வேறு.

உலக அளவில் மதிக்கப்படும் இயக்குனர் ராணா. தனது புதிய படத்தில் பந்தா செய்யும் கதாநாயகியை நீக்கிவிட்டு, ஹம்பியில் தான் பார்க்கும் த்‌ரிஷ்னாவை நடிக்க வைக்கிறார். த்‌ரிஷ்னா யார்? அவரது பூர்வீகம் எது? ராணா தவிர யாருக்கும் தெ‌ரியாது. த்‌ரிஷ்னாவிடம் ராணா காட்டும் அதிகபடியான நெருக்கம் தவறான யூகங்களுக்கு வழி வகுக்கிறது.

இந்நிலையில் த்‌ரிஷ்னாவிடம் தவறாக நடக்க முயலும் ஊர் பெ‌ரியவரும், பைனான்ஸியர் மகனும் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். ராணாவின் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் இந்த கொலைகள் நிகழ்வதால் சந்தேகம் ராணா மீது விழுகிறது.

படப்பிடிப்பு முடிந்து த்‌ரிஷ்னாவை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நேரத்தில் ராணாவின் கார் விபத்துக்குள்ளாகிறது. ராணா சிறு காயங்களுடன் தப்பிக்க, உடன் பயணம் செய்த த்‌ரிஷ்னா உடல் கருகி இறந்து போகிறார். முதல் இரண்டு கொலைகளுக்காக ராணாவை கைது செய்து விசா‌ரிக்கிறார், சிபிஐ அதிகா‌ரியான விவேக் வர்மா. முடிவு சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி.

ராணாவாக வரும் நானா படேகர் கறாரான க்‌ரியேட்டர் வேடத்தை சிறப்பாக செய்துள்ளார். சிகரெட் புகைத்தபடி அவர் பேசும் அலட்டலில்லாத உடல்மொழி தமிழுக்கு புதுசு. படத்தின் மிகப் பெ‌ரிய ப்ளஸ், நானா படேகர். இயல்பாக வரும் இவரை சில காட்சிகளில் 'நடிக்க' வைக்க பாரதிராஜமுயன்றிருப்பது செயற்கை.

குறிப்பாக ரஞ்சிதா படப்பிடிப்பில் இவரை அவமானப்படுத்திவிட்டு சென்ற பின் நடிகர்களுக்கு காட்சியை விளக்கும் பகுதி. அழுது கொண்டே சி‌ரிப்பது சீ‌ரியலுக்கு ஓகே. சீ‌ரியஸ் இயக்குனருக்கு பொருந்தவில்லை. நிழல்கள் ரவியின் குரல் நானாவுக்கு மெத்த பொருத்தம்.

விவேக் வர்மாவாக வரும் அர்ஜுனுக்கு அதிக வேலையில்லை. குற்றவாளி என சந்தேகப்படுகிறவ‌ரின் மனைவி அழைத்ததும் ஓடிச் செல்வதும், அவரது வழக்கறிஞருக்கு விளக்கம் சொல்வதும், சிபிஐ அதிகா‌ி செய்யும் வேலையாக தெ‌ரியவில்லை.

இவரது காதலியாக வரும் காஜல் அகர்வால் படத்தின் இன்னொரு சறுக்கல். முழுமை பெறாத கதாபாத்திரம். சிக்னலில் சந்திக்கும் நானா படேகருடன் இவர் அனைத்து இடங்களுக்கும் செல்கிறார். குடும்பம், வேலை எதுவும் இல்லாதவரா இவர்?

இறுக்கமான முகபாவங்களுடன் த்‌ரிஷ்னா வேடத்தில் ருக்மணி கச்சிதம். நடன அசைவுகளில் ருக்மணி, அசையும் கவிதை. ஊர் பெ‌ரியவராக வரும் மணிவண்ணன் இவ‌ரிடம் செய்யும் சில்மிஷங்கள் கற்காலத்தவை. இன்னும் ஆழமாக பாரதிராஜசிந்தித்திருக்கலாம். படத்தின் இறுதியில் வரும் ருக்மணி சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் படத்தின் உயிர்நாடி. அதனை வி‌ரிவாக சொல்லாமல் கொலை பற்றிய ஆராய்ச்சியாக படத்தின் பெரும் பகுதியை வீணடித்திருப்பது, பெரும் குறை.

ஹம்பி பின்னணியில், இந்தி முகங்களுக்கு நடுவில் விவேக்கும், மணிவண்ணனும் தண்ணீர், எண்ணெய்யாக ஒட்டாமல் தெ‌ரிகிறார்கள். இடம் பற்றிய குழப்பம் படத்தின் மீதான ஈர்ப்பை குறைக்கிறது. பாடலும் இசையும் பரவாயில்லை ரகம். ஒளிப்பதிவு பி. கண்ணன். படத்தை ரசிக்க வைப்பதில் கண்ணனின் பங்கு நிறைய.

அர்ஜுன், நானா படேகர் சந்திக்கும் காட்சிகள் அனைத்தையும் சிரத்தையாக அமைத்துள்ளார், பாரதிராஜா. அர்ஜு‌ன், நானா படேகரை விசாரணை செய்யும் காட்சியை நானாவின் ஆளுமை வெளிப்படும் வகையில் அமைத்திருப்பது பாரதிராஜஇயக்கத்தில் இமயம் என்பதை காட்டுகிறது.

காட்சிகள் கோர்வையாக இல்லாமல் முன்னுக்குப் பின் முரணாக அமைத்திருப்பது பல நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேச விருது பெற்ற ராணா இயக்கும் படத்தின் காட்சிகள் உள்ளூர் உளுத்துப் போன சினிமா அளவுக்கே இருப்பதும், காற்றில் பறக்கும் பேப்பர்களை ஸ்லோமோஷனில் தாவி பிடிக்கும் கதாநாயகியின் அறிமுகமும் பாரதிராஜபுதுப்பிக்க வேண்டிய பழைய முகங்கள்.

படத்தின் ஆச்ச‌ரியமான கிளைமாக்ஸுக்காக ஒருமுறை பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்