வாரணம் ஆயிரம் - விமர்சனம்!

தந்தை மகன் உறவை சொல்லும் வாரணம் ஆயிரத்தின் மிகப்பெரிய மைனஸ், அந்த உறவு ஆத்மார்த்தமாக பதிவு செய்யப்படாததே.

எல்லையில் தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு கிளம்பும் சூர்யாவிடம் (மகன் சூர்யா) அவரது அப்பா கிருஷ்ணனின் (அப்பா சூர்யா) மரணச் செய்தி சொல்லப்படுகிறது. தனது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அப்பாவின் ஆளுமையை எண்ணிப் பார்க்கும் சூர்யாவின் பிளாஷ்பேக்குடன் படம் தொடங்குகிறது.

சூர்யாவுக்கு அவரது அப்பா கிருஷ்ணன்தான் ரோல் மாடல். அப்பாவும், அம்மா மாலினியும் (சிம்ரன்) காதலித்து திருமணம் செய்தவர்கள். சூர்யா +2 முடித்ததும் கடன் வாங்கி மகனை திருச்சி கல்லூரிக்கு படிக்க அனுப்புகிறார் கிருஷ்ணன். படிப்பை தவிர மற்ற அனைத்திலும் தேர்ச்சி பெறுகிறார் சூர்யா.
webdunia photoWD

இறுதி பரீட்சை முடிந்து ஊர் திரும்பும் போது ரயிலில் சந்திக்கும் மேக்னாவை (சமீரா ரெட்டி) கண்டதும் காதல் கொள்கிறார் சூர்யா. மேக்னாவின் மனதில் இடம்பிடிக்க அவரது தந்தையின் காதல்தான் உத்வேகமாக இருக்கிறது. படிப்புக்காக அமெரிக்கா செல்லும் காதலியை தேடி சூர்யாவும் அமெரிக்கா செல்கிறார். அங்கு நடக்கும் விபத்து அனைத்தையும் தலைகீழாக மாற்றிப் போடுகிறது. போதையின் பிடியில் சிக்கும் சூர்யா, எப்படி அதிலிருந்து மீண்டு மேஜராகிறார் என்பது மீதி கதை.

சோடா புட்டியும், சுருட்டை முடியுமாக சிம்ரனை டாவடிக்கும் அப்பா சூர்யா ரசிக்க வைக்கிறார். சமீராவை ரயிலில் பார்த்ததும் சூர்யா (மகன்) காட்டும் முகபாவங்களும், கிடார் இசைத்து பனிவிழும் பாடலைப் பாடுவதும் இளமைச் சாரல்.

கதாபாத்திரத்துக்காக உடம்பை அவர் வருத்தியிருப்பத மலைக்க வைக்கிறது. உடல் இளைத்து பதினேழு வயது பையனாகவே மாறியிருக்கிறார். என்ன பயன்? அதற்கு தீனிபோடும் காட்சிகள் எதுவுமில்லை.

அப்பாவாக வரும் சூர்யாவின் மேக்கப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும் பாடிலாங்வேஜ் வெவ்வேறானது. சூர்யாவிடம் தெரிவது நோயாளிகளுக்கான பாடிலாங்வேஜ். படத்தின் முதுகெலும்பான அப்பா கதாபாத்திரம் புற்றுநோயில் ரத்த வாந்தி எடுத்து சாகும்போதும் பரிதாபம் ஏற்படுவதில்லை. படத்தின் முக்கியமான மைனஸ்களில் இதுவும் ஒன்று. காதலை தவிர அப்பாவைப் பார்த்து மகன் இம்ப்ரஸாகும் காட்சிகள் எதுவுமில்லாதது பெரும் குறை.

இரட்டை ஜடை சிம்ரனை ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டம். அதிக மேக்கப் இல்லாமலே வயதான தோற்றம் சிம்ரனுக்கு பொருந்துவிடுகிறது. ஆனாலும், சூர்யா அவரை அம்மா என்று அழைக்கும்போது வயசு உதைக்கிறது. சமீரா ரெட்டியின் காதலுக்காக அவரைத் தேடி அமெரிக்கா செல்கிறார் சூரூயா. சமீராவின் அழகுக்கு அண்டார்டிகாவே செல்லலாம். அழகழகான உடைகளில் அழகழகாக புன்னகைப்பதுடன் அவரது வேலை முடிந்து விடுகிறது.

ப‌ரிதாபம் திவ்யா. யூனிஃபார்மில் பள்ளி மாணவியாகவும், சேலையில் பெரிய பெண்ணாகவும் வந்து போகிறார். உடல் இளைப்பதெல்லாம் ஹீரோவுக்குத்தான் போலும். சூர்யா இவரை காதலிப்பதற்கான காரணம் லூஸ் மோகனை விட பலவீனம். போதையிலிருந்து விடுபட, தேசாந்திரியாக சுற்றும் சூர்யாவும், கிட்நாப் செய்யப்பட்ட சிறுவனை அவர் காப்பாற்றும் காட்சியும் தேவையில்லாத ஆறாவது விரல்.

ஹாரிஸின் பாடல்கள் அனைத்தும் ஒன்ஸ்மோர் ரகம். பின்னணி இசையில் இசையை விட ஓசை அதிகம். அதிலும் கிளைமாக்ஸ் துப்பாக்கிச் சண்டையில் காது காரசாரமாகி விடுகிறது. லைட்டிங்கில் மனதை கவரும் ரத்னவேலு, கேமரா கோணங்களிலும், மூவ்மெண்டிலும் கருத்தைக் கவர தவறியிருக்கிறார். கதை கூறலுக்கு எடிட்டிங்கும் எதிராயாகவே உள்ளது.

அமெரிக்கா, ராணுவ அகாடமி என்று யோசித்ததை அமைஞ்சிகரை, போலீஸ் அகாடமி என்று வைத்திருந்தாலும் கதைக்கு பாதகம் வந்திருக்காது. செலவு மிச்சம். இப்போது பூனைக்கு யானை விலை.

யானைக்கு நிலம், முதலமைக்கு ஜலம். கெளதமுக்கு பலம் சின்னச் சின்ன நிகழ்வுகள். அதை உணராமல் மெகா சீரியலுக்கான கதையை கையிலெடுத்ததுதான் அனைத்து தவறுகளுக்கும் தொடக்கப் புள்ளி. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!