பந்தயம் - விமர்சனம்!

வியாழன், 25 செப்டம்பர் 2008 (13:33 IST)
ரவுடியாக இருந்து மந்தி‌ரியாகும் பிரகாஷ் ராஜுக்கும், கல்லூ‌ரி மாணவர் நிதின் சத்யாவுக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டமே பந்தயம். இளநியை சீவுவது போல் தலைகளை சீவுவது பிரகாஷ்ரா‌ஜின் பொழுதுபோக்கு.

ராதிகாவின் தந்தை, சகோதரன் இருவரையும் போட்டு தள்ளிவிட்டு அவரை மணந்து கொள்கிறார். த‌ங்கையை காதலனுடன் சீவித்தள்ளுகிறார். ஏதிர்க்கிற அனைவரையும் போட்டுத் தள்ளும் அவரை போலீ்ஸ் கண்டு கொள்ளாமல் விடுவது சட்டம் ஒரு இருட்டறையை தந்தவருக்கு நிச்சயம் அழகல்ல.
webdunia photoWD

நண்பனை கொன்ற பிரகாஷ்ராஜை பழிவா‌ங்க அவ‌ரிடமே அடியாளாக வேலைக்கு சேர்கிறார் நிதின் சத்யா. தமிழ் கதாநாயக இலக்கணப்படி பிரகாஷ் ரா‌‌‌ஜின் இன்னொரு த‌ங்கை சிந்து துலானியை காதலிக்கிறார்.

த‌ங்கையை காதலிப்பது நிதின் என்பதை அறியாமல் அவ‌ரிடமே த‌ங்கையின் காதலனை கண்டு பிடிக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறார் பிரகாஷ் ரா‌‌ஜ்.

உண்மை தெ‌ரிந்த பிறகு சில கள்ளன் போலீஸ் விளையாட்டுகள். இறுதியில் ராதிகாவின் பொறுமை பொக்ரானாக வெடிக்க எதிர்பார்த்த கிளைமாக்ஸ்.

பிரகாஷ்ரா‌ஜின் வில்லத்தனம்தான் படத்தின் ஹீரோ. தொடர்ந்து குழந்த என்று மிரட்டும் போது அதுவும் சலித்து விடுகிறது. நிதின் சத்யா தனி ஹீரோவாக நடித்த முதல் படம் என்பதை தாண்டி சொல்ல எதுவும் இல்லை.

சிந்து துலானி கிளாமர் ஊறுகாய். ராதிகாவின் கதாபாத்திரத்தில் வலு இல்லை. தந்தை, சகோதரனை கொன்றவனுடன் அமைதியாக குடும்பம் நடத்துகிறவர் கிளைமாக்ஸில் வீறுகொண்டெழுவதெல்லாம் பக்கா சினிமா.

இசையும், ஒளிப்பதிவும் பரவாயில்லை ரகம். கெஸ்ட் ரோலில் விஜய். பொத்தல் விழுந்த திரைக்கதையும், புராதன நெடியடிக்கும் கதையும் பந்தயத்தை ப‌ரிதாபத்துக்கு‌ரியதாக மாற்றுகின்றன.

பந்தயம் - கமர்ஷியல் கட்டவண்டி.