தொழில்நுட்பத்தில் வளர்ந்திருக்கும் தமிழ் சினிமா திரைக்கதையில் இன்னும் போன்சாய் அளவிலேயே இருக்கிறது. திரைக்கதையிலும் நல்ல மாற்றம் வரும் என்ற நம்பிக்கையை இரண்டாவது முறையாக விதைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.
டி.வி. நடிகர் அஜய்ராஜ் (சிவா), கணேஷ் குமார் (பிரேம்ஜி), கெஜபதி பாபு (சரண்), அவரது தம்பி ராம்பிரபு (வைபவ்). நால்வரும் நண்பர்கள் ஹைதராபாத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியைக் காண கேரவன் ஒன்றில் நால்வரும் ஹைதராபாத் புறப்படுகிறார்கள்.
webdunia photo
WD
அதேநேரம் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் விஸ்வநாத்துக்கு (பிரகாஷ் ராஜ்) ஒரு பிரச்சனை. அவரது மகள் சரோஜா (வேகா) கடத்தப்படுகிறார். சரோஜாவை விடுவிக்க கடத்தல்காரனின் டிமான்ட் பத்து கோடி. விஸ்வநாத் தனது போலீஸ் நண்பர் ரவிச்சந்திரனின் (ஜெயராம்) உதவியை நாடுகிறார்.
இதனிடையில் சின்ன விபத்தொன்றின் காரணமாக சென்னைக்கே திரும்ப தீர்மானிக்கிறார்கள் நண்பர்கள். வைபவ் ஹைதராபாத் செல்ல குறுக்கு வழி ஒன்றி இருப்பதாக சொல்ல, பயணம் தொடர்கிறது. ஆனால் வழி தவறிவிடுகிறது. இண்டஸ்ட்ரி எஸ்டேட் ஒன்றில் மாட்டிக் கொள்கிறார்கள்.
நண்பர்கள் மாட்டிக்கொள்ளும் இடத்தில்தான் வேகா கடத்தி வைக்கப்பட்டிருக்கிறாள். நண்பர்கள் நிலை என்ன ஆனது? வேகா காப்பாற்றப்பட்டாரா? சின்னச் சின்ன சுவாரஸ்ய முடிச்சுகளுடன் நிறைவான கிளைமாக்ஸ்.
பேபெல் (Babal) படத்தின் இன்ஸ்பிரேஷனில் சரோஜா திரைக்கதையை அமைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. கைகொடுத்து பாராட்ட வேண்டிய முயற்சி. ஒருநாள் சம்பவமே படம். அதில் அவர் சேர்த்திருக்கும் திரைக்கதை நுணுக்கங்களுக்கும், கதாபாத்திரங்களை வடிவமைத்த விதத்திற்கும், சபாஷ்!
பிரேம்ஜிக்கு அழகான எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் காதல். பாரதிராஜா பாடலுடன் வெள்ளை உடை தேவதைகள் சுற்றிவரும் கற்பனை, சிரிக்க வைக்கிறது. வைபவ் தனது காதலை நண்பன் சிவாவுக்காக தாரை வார்த்தவர். எஸ்.பி.பி. சரண் குடும்பஸ்தர். ஒவ்வொருவருக்கும் தனித்துவமான பின்னணி தந்திருபூபது, படத்துடனான ஈடுபாட்டை அதிகரிக்கிறது.
சிவாவின் காதலியாக காஜல் அகர்வால். கடத்தப்படுகிறவராக வேகா. வில்லன் சம்பத்ராஜின் ஆளாக நிகிதா. முன்னவருக்கும் பின்னவருக்கும் வேலையில்லை. நடுவில் உள்ளவருக்கே நடிக்க ஸ்கோப்.
நணபர்களின் வேன் முன்பு குண்டு காயத்துடன் போஸ்வெங்கட் குறுக்கே விழும்போது, திரைக்கதையின் ஸ்பீடா மீட்டர் எகிறுகிறது. பிறகு வரும் ஒவ்வொரு கணமும் திக்... திக்...
நாள் நேரம் நிமிடங்களுடன் காட்சிகளை திரையில் பார்ககும்போது பார்வையாளர்களிடம் இயல்பாகவே எதிர்பார்ப்பு ஒட்டிக்கொள்கிறது. பிரேம்ஜியின் காமெடி படத்தின் கமர்ஷியல் வேல்யூவை அதிகரிக்கிறது. சீரியஸான கட்டங்களில் இவரது காமெடி எரிச்சலை வரவழைக்காமலிருப்பதே ஆறுதல். சரண் சிறிய ஓட்டைக்குள் மாட்டிக்கொண்டு மரண பயணத்தை வெளிப்படுத்தும் இடம், அவரது நடிப்புக்கு நற்சான்றிதழ்.
படத்தில் வெங்கட்பிரபுவை சேர்த்து மூன்று ஹீரோக்கள். ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இரவுக் காட்சிகளை கேமரா படம் பிடித்தவிதம் பிரமிப்பு. யுவனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஒன்ஸ்மோர் ரகம். பிரவீன்-ஸ்ரீகாந்த் எடிட்டிங்கையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம்.
பிரகாஷ் ராஜ், போலீஸ் ஜெயராம் இருவரும் பாத்திரம் அறிந்து நடித்துள்ளனர். சம்பத்ராஜின் வில்லத்தனத்தில் கள்ளத்தனம் அதிகம்.
பிற்பகுதியில் கதை இன்டஸ்ட்ரிக்குள் முழுவதுமாக மாட்டிக் கொள்வது சற்றே அலுப்பு. அலெஜான்ட்ரோ கொன்ஸாலஸ் இனாரித்துவின் பேபெல் திரைக்கதை வெங்கட்பிரபுவை பாதித்தது போல், அப்படத்தின் உணர்வுப்பூர்வமான கதையும், கலாச்சார, அரசியல் பின்னணியும் பாதித்திருந்தால் சரோஜா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படமாகியிருக்கும்!