தனித் தீவு, அதிலொரு சொகுசு பங்களா. பங்களாவுக்குள் ஒரு தேனிலவு ஜோடி. சொல்லும் போதே ஜில்லென்று முதுகுதண்டு குளிரும் கதை. அதையே எம். கார்த்திக்கின் பகீர் இசையுடன் பார்த்தால்...?
குளிரெடுத்து குலை நடுங்கியிருக்க வேண்டும். ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. புது மனைவியை பங்களாவில் தனித்துவிட்டு நண்பனிடம் வயக்ரா வாங்கப் போகிறார் கணவன். மனைவியின் கண்களுக்கு திகில் உருவம் ஒன்று தெரிகிறது.
திரும்பி வரும் கணவனோ மனைவியின் கதையை நம்ப மறுக்கிறான். மனைவிக்கு ஏற்பட்ட அதே அனுபவம் கணவனுக்கும் ஏற்பட, இந்த திகில் உருவம் யார் அல்லது எது என சஸ்பென்ஸ் கொக்கி. சமூக அக்கறையுடன் கொக்கியை இயக்குனர் விடுவிக்க சுபம்.
மோனிகாவின் முன் முன்னா வெறும் சும்மா. தேனிலவு இளம்பெண்ணின் உணர்வை அப்படியே முகத்தில் கொண்டு வருகிறார். பயத்தில் நடுங்காத உடம்பு இவரின் கவர்ச்சியில் ஜில்லிடுகிறது. ஆடையைக் குறைத்தவர் கூடவே எடையையும் குறைப்பது நல்லது.
webdunia photo
WD
மோனிகாவின் கவர்ச்சிப் பிரதேசங்களில் மேய்வதுடன் முடிந்துவிடுகிறது முன்னாவின் பணி. அந்த புதுமக வில்லன் சந்துரு சரியான தேர்வு.
பங்களாவுக்கு வரும் முன்னா, மோனிகா ஜோடியை வரவேற்கும் சமையல்காரன், ஏற்கனவே இறந்து போனவன் என்பதும், வாட்ச்மேனின் மரணமும் திரைக்கதையை வேகப்படுத்துகின்றன.
மோனிகாவின் தோழிகள் அடுத்தடுத்து கொல்லப்பட, கொலைகாரன் யார் என்ற கேள்வி விஸ்வரூபமெடுக்கிறது. அதற்கு பதில் சொல்லும் விதமாக அமைந்த சாஃப்ட்வேர் பெண்களின் நாகரிக கலாச்சாரம் உண்மை என்றாலும், இரண்டரை மணி நேர படத்தை இதை முன்னிட்டு எடுப்பதா என சின்ன சலிப்பும் தோன்றுகிறது.
பெளசியாவின் ஒளிப்பதிவும், எம். கார்த்திக்கின் இசையும் சிலந்தியின் பலம்.