சந்தோஷ் சுப்பிரமணியம்!

புதன், 30 ஏப்ரல் 2008 (15:45 IST)
"தோளுக்கு மேல் வளர்ந்து விட்டால் தோழன்", அதன்பிறகும் சின்னக் குழந்தையைப் போல் பாவித்தால் தந்தை-மகன் உறவுக்குள் என்ன நடக்கும். அதுதான் கதை.

webdunia photoWD
சொல்லுவதற்கு முன்பே தன் மகனின் தேவைகளை பூர்த்தி செய்யும் அப்பா பிரகாஷ் ராஜ். எனக்குத் தேவையானதை செய்தால் போதும், அதற்கான சுதந்திரம்தான் எனக்கு வேண்டும் என்று நினைக்கும் மகன் ஜெயம் ரவி. இவர்களுக்கிடையே நடக்கும் உணர்வு மற்றும் எதிர்பார்ப்புகள் படம் முழுதும் நம்மை சிலிர்க்க வைக்கின்றன.

இந்த உணர்வுகளை நகைச்சுவையோடு இணைந்த தளத்தில் கொண்டு சென்றிருப்பதுதான் இயக்குநரின் சாமர்த்தியம். அப்பாவி‌ன் விருப்பத்துக்காக திருமணம் நிச்சயிக்க ரவி ஒப்புக்கொள்வதும், பின்னர் ஜெனிலியா எனும் வசந்தம் வாழ்க்கையில் குறுக்கிட மறுகி நிற்பதுமாய், அப்பாவை தாண்டவும் முடியாமல், தடுக்கவும் முடியாமல் தவிக்கிறார்.

webdunia photoWD
ஒரு வாரம் நீ காதலிக்கும் பெண்ணை நம் வீட்டில் தங்க வை. நம் குடும்பத்துக்கு ஏற்ற பெண்ணாக இருந்தால் சம்மதிக்கிறேன் என்கிற பிரகாஷ் ராஜின் சத்திய சோதனைக்கு ரவி கட்டுப்படுகிறார். சோதனையில் வெற்றி பெற்று காதலர்கள் இணைவது சந்தோஷ் சுப்பிரமணியத்தின் சந்தோஷ முடிவு.

படம் முழுவதும் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லை. ஜெயம் ரவியின் நண்பர்களாக வரும் சந்தானம், பிரேம்ஜி அதகளப்படுத்துகிறார்கள். ஜெனிலியாவின் அப்பாவாக வரும் ஷயாஜி ஷிண்டே, பேராசிரியராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் காட்சியை கலகலப்பாக்கி விடுகிறார்கள்.

மேக்கப் பைத்தியமாக அலையும் ரவியின் தங்கை, செல்ஃபோனோடு எப்போதும் பேசிக்கொண்டு திரியும் அக்கா கெளசல்யா, அந்த வேலைக்காரர் என சின்னச் சின்ன பாத்திரங்களைக் கூட கதைக்கு வலுசேர்க்க வைத்துள்ள இயக்குநர் ராஜா பாராட்டுக்குரியவர்.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை காதுக்கு இனிமை. கண்ணனின் ஒளிப்பதிவும் கண்களுக்கு இதம். பாசம், காதல், ந‌ட்பு, உறவுகளுக்குள் உள்ள உணர்வுகளை சொன்னதில் "சந்தோஷ் சுப்பிரமணியம்" நம்மை சபாஷ் போடச் சொல்கிறது.